தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி, மதரஸா வாரியங்கள் "நிறுத்தப்பட்டு மூடப்பட வேண்டும்", மதரஸாக்கள் மற்றும் மதரஸா வாரியங்களுக்கு மாநில அரசின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும், மற்றும் மதரஸாக்களுக்குச் செல்லும் குழந்தைகள் "முறையான பள்ளிகளில்" சேர்க்கைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Child rights panel asks states to stop funding, shut down madrasas board
கடிதத்தைப் படித்த பிறகு கருத்து தெரிவிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், பயோடெக், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றுக்கான காங்கிரஸ் கட்சியின் கேபினட் அமைச்சர், நிதியுதவியை நிறுத்தவும், மதரஸாக்களை மூடச் செய்யவும் மாநில அரசுகளிடம் கேட்பதை விட, ஒரு கமிஷன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார். “மஹாராஷ்டிரா அரசாங்கம் மதரஸா ஆசிரியர்களின் சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்த முடிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கடிதத்தைப் பார்ப்பது மிகவும் முரண்பாடாக இருக்கிறது,” என்று அந்த அமைச்சர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.கே.பாஜ்பாய் கூறுகையில், “எந்த மதரஸாவும் சட்டவிரோதமாக இயங்குவது கண்டறியப்பட்டால், அதை மூட வேண்டும். ஆனால் கண்மூடித்தனமாக எதையும் செய்யக்கூடாது என்று கூறினார். மாநிலங்களில் இருந்து ஏதேனும் பாதகமான அறிக்கைகள் கிடைத்ததைத் தொடர்ந்து என்.சி.பி.சி.ஆர் கடிதம் எழுதியதா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஏ.கே.பாஜ்பாய் கூறினார்.
“அனைத்து மதரஸாக்களிலும் முறைகேடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மேலும் ஏதேனும் சட்டவிரோதம் கண்டறியப்பட்டால், அவர்கள் தங்களை விளக்குவதற்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்,” என்று எல்.ஜே.பி கட்சியின் பாஜ்பாய் கூறினார்.
என்.சி.பி.சி.ஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோவின் அக்டோபர் 11 கடிதத்தில், “கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி அனைத்து முஸ்லீம் அல்லாத குழந்தைகளையும் மதரஸாக்களில் இருந்து வெளியேற்றி பள்ளிகளில் சேர்த்து அடிப்படைக் கல்வியைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத, மதரஸாவில் படிக்கும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, ஆர்.டி.இ சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட நேரம் மற்றும் பாடத்திட்டத்தின் கல்வியைப் பெற வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சியான ஜே.டி(யு) கருத்துக்கு கிடைக்கவில்லை. மற்றொரு கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான ஆனந்த் பதௌரியா கூறுகையில், ”என்.சி.பி.சி.ஆர் கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், சமூகத்தில் வெறுப்பு மற்றும் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருப்பதாகவும் தெரிகிறது. பல மதரஸாக்கள் சிறந்த பணியைச் செய்து அறிஞர்களை உருவாக்கி வருகின்றன, ஆனால் தவறான கருத்தை உருவாக்க நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொருளாதார வசதி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இங்கு படிக்கின்றனர். இந்த அபத்தமான கடிதத்தை திரும்பப் பெற வேண்டும்," என்று கூறினார்.
ப்ரியங்க் கனூங்கோவின் கடிதத்தில், ஆர்.டி.இ சட்டத்திலிருந்து மத நிறுவனங்களுக்கு விலக்கு அளித்தது, "மத நிறுவனங்களில் மட்டுமே படிக்கும் குழந்தைகளை முறையான கல்வி முறையிலிருந்து விலக்குவதற்கு" வழிவகுத்தது என்றும், "அரசியலமைப்புச் சட்டத்தின் 29 மற்றும் 30 பிரிவுகள் சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் இந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தரமான கல்விக்கு சமமான அணுகல் இல்லாமல் இருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கம் இறுதியில் "தவறான விளக்கம் காரணமாக இழப்பு மற்றும் பாகுபாடு" என்ற புதிய அடுக்குகளை உருவாக்கியது என்று கடிதம் குறிப்பிடுகிறது.
அசெர் (ASER) போன்ற அறிக்கைகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்றன என்று பிரியங்க் கார்கே கூறினார். "நீங்கள் அவற்றை மூட வேண்டும், அரசாங்கங்கள் அவற்றை இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமா? அறிக்கை ஒரு சட்டம் அல்ல. மாநில அரசு இந்த அறிக்கை, அதன் கண்டுபிடிப்புகள், வழிமுறைகளை விரிவாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளும்,” என்று பிரியங்க் கார்கே கூறினார்.
கடிதத்துடன், 'நம்பிக்கையின் பாதுகாவலர்கள் அல்லது உரிமைகளை ஒடுக்குபவர்கள்: குழந்தைகளின் அரசியலமைப்பு உரிமைகள் vs மதரசாக்கள்' என்ற தலைப்பில் என்.சி.பி.சி.ஆரால் தயாரிக்கப்பட்ட சமீபத்திய அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது, இது மதரஸாக்கள் "குழந்தைகளின் கல்வி உரிமைகளை மீறுகின்றன" என்று கூறுகிறது. மதரஸாக்களில் உள்ள பாடத்திட்டம் "ஆர்.டி.இ சட்டத்தின்படி" இல்லை என்றும், என்.சி.பி.சி.ஆர் பாடத்திட்டத்தில் "அசாதாரணங்களை" கண்டறிந்துள்ளதாகவும் கூறியுள்ளது. அதாவது "தினியாத் புத்தகங்களில் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம்", "இஸ்லாத்தின் மேன்மை" என்று கூறும் நூல்களை கற்பித்தல், மற்றும் பீகார் மதரஸா வாரியம் "பாகிஸ்தானில் வெளியிடப்பட்ட" புத்தகங்களை பரிந்துரைக்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பரிந்துரைத்தபடி, மதரஸாக்களில் பயிற்சி பெற்ற மற்றும் தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்றும், மதரஸாக்களில் உள்ள ஆசிரியர்கள் "பெரும்பாலும் குர்ஆன் மற்றும் பிற மத நூல்களைக் கற்றுக்கொள்வதில் பயன்படுத்தப்படும் வழக்கமான முறைகளையே சார்ந்துள்ளனர்” என்றும் மாநில அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் என்.சி.பி.சி.ஆர் தெரிவித்துள்ளது. ஆர்.டி.இ சட்டம் ஆசிரியர்களுக்கான தகுதிகள் மற்றும் மாணவர்-ஆசிரியர் விகிதத்தை குறிப்பிடுகிறது, மேலும் மதரஸாக்களில் இந்த ஏற்பாடுகள் இல்லாததால், குழந்தைகள் "திறமையற்ற ஆசிரியர்களின் கைகளில் விடப்படுகிறார்கள்" என்று கடிதம் கூறுகிறது.
இந்த நிறுவனங்கள் இஸ்லாமியக் கல்வியை வழங்குவதாகவும், "மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கையைப் பின்பற்றவில்லை" என்றும் அறிக்கை கூறுகிறது; வழக்கமான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் சீருடைகள், புத்தகங்கள் மற்றும் மதிய உணவு போன்ற வசதிகள் மற்றும் உரிமைகளை மத்ரஸாக்கள் "பறிக்கின்றன"; முறையான கல்வியை வழங்கும் பள்ளிகள் ஆர்.டி.இ சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், மேலும் மதரஸாக்களுக்கு அத்தகைய வழிமுறை எதுவும் இல்லை, அவற்றின் செயல்பாட்டில் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை; மதரஸா வாரியங்கள் "முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இந்துக்களுக்கும் இஸ்லாமிய மதக் கல்வி மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குகின்றன, இது இந்திய அரசியலமைப்பின் 28 (3) வது பிரிவின் அப்பட்டமான மீறலாகும்." இந்து மற்றும் முஸ்லீம் அல்லாத குழந்தைகளை மதரசாக்களில் இருந்து வெளியேற்ற மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
என்.சி.பி.சி.ஆர் தனது அறிக்கையில், UDISE குறியீடுகளைக் கொண்ட மதரஸாக்களை ஆய்வு செய்யவும், ஆர்.டி.இ சட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்றால் மதரஸாக்களின் அங்கீகாரத்தை திரும்பப் பெறவும் மாநிலங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறு கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளருக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் கடிதம் எழுதப்பட்டது. ஜூலை மாதம், மதரஸாக்களை ஆய்வு செய்வது குறித்த அறிக்கையை கோரி மாநிலங்களின் கல்விச் செயலாளர்களுக்கு அமைச்சகம் கடிதம் எழுதியது.
மதரஸாக்களில் தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் இல்லாமல் “தன்னிச்சையான செயல்முறை” இருப்பதாகக் கூறி, அனைத்து முஸ்லீம் அல்லாத குழந்தைகளையும் மதரஸாக்களில் இருந்து வெளியேற்றி மற்ற பள்ளிகளில் சேர்க்க வேண்டும், அறிக்கை பரிந்துரைக்கிறது, மதரஸாக்களில் படிக்கும் அனைத்து முஸ்லிம் குழந்தைகளும் முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், மற்றும் மதரஸாக்கள் மற்றும் மதரஸா வாரியங்களுக்கு மாநில நிதியுதவி நிறுத்தப்பட்டு, இந்த வாரியங்கள் மூடப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், என்.சி.பி.சி.ஆர், மதரஸாக்களில் வழங்கப்படும் கல்வி "விரிவானது அல்ல, எனவே கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது" என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. உத்தரப் பிரதேச மதரசா கல்வி வாரியச் சட்டம், 2004ஐ “அரசியலமைப்புக்கு எதிரானது” என்று அறிவித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில், அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் "மதச்சார்பின்மை கொள்கை" மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் அடிப்படையில் "அரசியலமைப்புக்கு எதிரானது" என்று என்.சி.பி.சி.ஆர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.