சீன அரசிடம் இந்திய அரசாங்கம் முறையான வேண்டுகோள் விடுத்தால் நீரவ் மோடியைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனாவின் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹாங்காங்கில் நீரவ் மோடி தலைமறைவாகியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். அவருடன் மோசடியில் ஈடுபட்ட அவரது உறவினர்களை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது தேடி வருகின்றனர். இந்த வழக்கில் நீரவ் மோடி ஜாமினில் வெளிவா முடியாதபடி பிடிவாரண்டை, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு தேடும் குற்றவாளி என அறிவித்துள்ள நீரவ் மோடி, ஹாங்காங்கில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் பேசும்போது, `சீனாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஹாங்காங் அரசிடம் நீரவ் மோடியைக் கைது செய்யக் கோரிக்கையை வைத்துள்ளோம்’ என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி இந்திய அரசின் சார்பில் ஹாங்காங் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஹாங்காங் அரசுடன் இந்திய அரசு ஏற்கனவே குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இருப்பினும் இதுதொடர்பாக சீனாவிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போது நீரவ் மோடியை ஹாங்காங் கைது செய்ய சீன அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஹாங்காங் நடவடிக்கை எடுக்கலாம் என்று சீனா கூறியுள்ளது.