கிழக்கு லடாக்கில் புதிய பதற்றம்: நிலையை மாற்ற சீனாவின் முயற்சிகளை தடுக்கும் ராணுவம்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், ஜூலை நடுப்பகுதியில் இருந்து ஒரு முட்டுக்கட்டைக்குள் சிக்கியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் சீனா ஒரு புதிய இடத்தில் புதிய சிக்கலை உருவாக்க முயற்சித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

By: Updated: August 31, 2020, 09:58:19 PM

கிழக்கு லடாக்கில் கிட்டத்தட்ட 4 மாத கால நிலைமையை தீர்ப்பதற்காக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், ஜூலை நடுப்பகுதியில் இருந்து ஒரு முட்டுக்கட்டைக்குள் சிக்கியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் சீனா ஒரு புதிய இடத்தில் புதிய சிக்கலை உருவாக்க முயற்சித்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30ம் தேதி இரவு, சீனத் துருப்புக்கள் பாங்காங் த்சோ ஏரியின் தென் கரையில் நிலையை மாற்ற முயற்சித்ததாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த முயற்சி இராணுவத்தால் முறியடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 29,30ம் தேதி இரவு சீன மக்கள் விடுதலை ராணுவத் (பி.எல்.ஏ) துருப்புக்கள், கிழக்கு லடாக்கில் நடந்துவரும் மோதல் காலத்தில், ராணுவம் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளின்போது வந்த முந்தைய ஒருமித்த கருத்தை மீறியுள்ளது. மேலும், நிலையை மாற்ற ஆத்திரமூட்டும் ராணுவ நகர்வுகளை மேற்கொண்டது” என்று ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்திய துருப்புக்கள் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் பி.எல்.ஏ நடவடிக்கையை முன்கூட்டியே நிறுத்தியதோடு, நம்முடைய நிலைகளை வலுப்படுத்தவும், களத்தில் ஒருதலைப்பட்சமாக உண்மைகளை மாற்றும் சீனாவின் நோக்கங்களை முறியடிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இந்திய இராணுவம் பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியையும் சமாதானத்தையு பேணுவதில் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், இந்திய ராணுவம் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் சம அளவில் உறுதியாக உள்ளது. இந்த சிக்கல்களைத் தீர்க்க சுஷூலில் ஒரு பிரிகேட் கமாண்டர் அளவிலான ஒரு கூட்டம் நடந்து வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாத ஆரம்பத்தில் தொடங்கிய மோதலில் பாங்கோங் தசோவின் வடக்குக் கரை இரு தரப்பினருக்கும் இடையே ஒரு முக்கிய விவாதமாக உள்ளது. இருப்பினும், ஏரியின் தென் கரையைப் பற்றி இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை.

வட கரையில், சீன துருப்புக்கள் ஃபிங்கர் 8க்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ள ஃபிங்கர் 4 ஸ்பர்ஸ் பகுதியை தொடர்ந்து வைத்திருக்கின்றன. அதன் வழியாக சரியான கட்டுப்பாட்டுக் கோடு கடந்து செல்கிறது என்று இந்தியா கூறுகிறது. மோதல் தொடங்கியதிலிருந்து சீன துருப்புக்கள் ஃபிங்கர் 8 மற்றும் ஃபிங்கர் 5க்கு இடையில் தங்கள் நிலைகளை வலுப்படுத்தி வருகின்றன. மேலும், பின்வாங்கவும் மறுத்துவிட்டன.

பாங்கோங் சோ பகுதியைத் தவிர, கோக்ரா துறையிலும் எந்தவிதமான பின்வாங்களும் இல்லை.

வடக்கில், டெப்சாங் சமவெளியில், சீன துருப்புக்கள் சரியான கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்.ஏ.சி) மேற்கே 18 கி.மீ தொலைவில் உள்ள பிரச்னைக்குறிய பகுதி என அழைக்கப்படும் இடத்தில் உள்ளன. வடக்கில் காரகோரம் பாஸ் அருகே இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த தவுலத் பேக் ஓல்டி நிலைக்கு அருகில் உள்ள 5 ரோந்து புள்ளிகளுக்கு இந்திய துருப்புக்கள் செல்வதை சீனா தடுத்துள்ளது.

இரு தரப்பினரும் பல சுற்று ராணுவ மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள போதிலும், ஜூலை 14ம் தேதி முதல் சீனாவின் பிடிவாதமான நிலைப்பாட்டின் காரணமாக எந்தவொரு ராணுவ பின்வாங்கலும் ஏற்படவில்லை. எந்தவொரு ராணுவ பின்வாங்கலும் பரஸ்பரம் இருதரப்பிலும் இருக்க வேண்டும் என்று சீனா கோருகிறது. அதாவது இரு தரப்பினரும் தங்கள் துருப்புக்களை சம தூரத்தில் பின்வாங்க வேண்டும். இது இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிபந்தனையாகும். ஏனெனில், இது சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அதன் பக்கத்தில் எளிதான நிலப்பரப்பு காரணமாக சீனாவுக்கு ஒரு நன்மையை அளிக்கும்.

இருபுறமும் உள்ள துருப்புக்கள் ஏப்ரல் இறுதியில் தங்கள் நிலைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நிலைமையை இந்தியா கோருகிறது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையில் நடந்த 3 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரு தரப்பிலிருந்தும் துருப்புக்கள் 2 புள்ளிகளில் பின்வாங்கச் செய்யப்பட்டன:

கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள ரோந்து இடங்களாக 14 (பிபி 14) மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பிரிவில் பிபி 15 ஆகியவை உள்ளன. இதில் பிபி 14 என்ற இடத்தில் ஜூன் 15ம் தேதி இரு தரப்பு துருப்புக்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் நடந்தது. இதில், இந்தியா 20 வீரர்களை இழந்தது. அறிவிக்கப்படாத எண்ணிக்கையில் சீன துருப்புக்களும் உயிரிழந்தனர்.

இப்போது புதிய பதற்றம் பாங்கோங் சோவின் தென் கரையில் எழுந்துள்ளது. இது பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டடைவதில் அதிக தடைகளை உருவாக்கக்கூடும். ராணுவ அதிகாரிகள் மட்டத்திலோ அல்லது கமாண்டோ பிரிவு அதிகாரிகள் மட்டத்திலோ மற்றொரு சுற்று இராணுவ பேச்சுவார்த்தைகளை நடத்த இரு தரப்பினரும் திட்டமிட்டிருந்தனர்.

இந்த இடங்களில் சீன துருப்புக்கள் இருப்பதைத் தவிர, மற்றொரு முக்கிய கவலை, உள்பகுதிகளில் சீனாவால் குறிப்பிடத்தக்க ராணுவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அங்கே சீனா கூடுதல் துருப்புக்களையும் மற்றும் ராணுவ உபகரணங்களையும் நிலைநிறுத்தியுள்ளது. கூடுதல் பிரிவுகளையும், வான் பாதுகாப்பு தளங்கள் மற்றும் விமானப்படையையும் நிலைநிறுத்துவதன் மூலம் இந்தியாவும் எதிரொளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:China army status quo south banks of pangong tso fresh tension in eastern ladakh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X