இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமையை மீண்டும் வலியுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அருணாச்சலப் பிரதேசத்திற்கான மூன்றாவது தொகுதி பெயர்களை சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துக்களில் சீனா வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்தியா செவ்வாய்கிழமை அத்தகைய முயற்சியை நிராகரித்தது.
வெளிவிவகார அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “அத்தகைய அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். சீனா இத்தகைய முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டப் பெயர்களை வழங்குவதற்கான முயற்சிகள் இந்த யதார்த்தத்தை மாற்றாது,” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: மீண்டும் சீண்டும் சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீனப் பெயர், வரைபடம் வெளியீடு
சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அருணாச்சலப் பிரதேசத்திற்கான 11 இடங்களின் தரப்படுத்தப்பட்ட பெயர்களை வெளியிட்டது. சீனாவின் அமைச்சரவை வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்த விதிமுறைகளின்படி "திபெத்தின் தெற்குப் பகுதியை ஜங்னான்" என்று சீனா அழைக்கிறது.
சீன அமைச்சகம் இரண்டு நிலப் பகுதிகள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், ஐந்து மலைச் சிகரங்கள் மற்றும் இரண்டு ஆறுகள் உள்ளிட்ட துல்லியமான புவியியல் விவரங்களை வழங்கியது மற்றும் இடங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள நிர்வாக மாவட்டங்களின் வகையையும் பட்டியலிட்டது.
சீனாவின் சிவில் விவகாரங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அருணாச்சல பிரதேசத்திற்கான தரப்படுத்தப்பட்ட புவியியல் பெயர்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தொகுதி மூன்றாவது தொகுதி ஆகும். அருணாச்சலத்தில் உள்ள ஆறு இடங்களின் தரப்படுத்தப்பட்ட பெயர்களின் முதல் தொகுதி 2017 இல் வெளியிடப்பட்டது, மேலும் 15 இடங்களின் இரண்டாவது தொகுதி 2021 இல் வெளியிடப்பட்டது.
அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை மாற்றும் சீன நடவடிக்கையை இந்தியா முன்பு நிராகரித்தது, அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக "எப்போதும் இருந்தது" என்றும் "எப்போதும்" இருக்கும் என்றும் "புதிதாக உருவாக்கப்பட்ட" பெயர்களை வழங்குவது இந்த உண்மையை மாற்றாது என்றும் வலியுறுத்தியது.
"அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றுவதற்கு சீனா முயற்சிப்பது இது முதல் முறை அல்ல" என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 2021 டிசம்பரில் கூறியிருந்தார். "அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட பெயர்களை ஒதுக்குவது இந்த உண்மையை மாற்றாது, ”என்று அவர் கூறினார்.
2017 இல் தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்த பிறகு முதல் தொகுதி பெயர்களை சீனா அறிவித்தது. திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமாவின் வருகையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
1950 ஆம் ஆண்டு இமயமலைப் பகுதியை சீனா இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததை அடுத்து, தலாய் லாமா திபெத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் வழியாகத் தப்பி 1959 இல் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil