/tamil-ie/media/media_files/uploads/2019/02/a542.jpg)
road diversion due to XI modi Visit
பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சீனாவுக்கு, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் 'ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி' என்று மத்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.
அருணாச்சல பிரதேசம், திரிபுரா, அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வருகிறார். இந்நிலையில் 2-வது நாளான இன்று(பிப்.9), அருணாச்சல பிரதேசம், இடாநகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, 110 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பாரே புனல் மின்சார நிலையம் உள்பட சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் சுமார் 125 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்ட தேஜு விமான நிலையத்தையும் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, 'அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் இந்தியாவின் பெருமிதம். அருணாச்சல் சூரிய உதயத்தின் நிலம். இவ்விடம் நமக்கு உறுதியை கொடுக்கிறது. சவுபாக்யா திட்டத்தின்கீழ் அருணாச்சல பிரதேசத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100% மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அருணாச்சால பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை மற்றும் ரயில் தடம் ஆகியவை அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் தலைநகர்களை இணைக்கிறது. மேலும் இம்மாநிலத்தில் நெடுஞ்சாலைகள், ரெயில்வே பாதைகள், விமான வழித்தடங்கள், மின்சார உற்பத்தி போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது, இதுவரை இம்மாநிலத்துக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்துக்கு பாஜக அரசு இரண்டு விமான நிலையங்களை கொடுத்துள்ளது.
அருணாச்சலப்பிரதேசத்தில் மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது ‘ஜெய் ஹிந்த்’ என்று வாழ்த்து தெரிவித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பதை அறிந்து நான் உண்மையிலேயே மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இத்தகைய நாட்டுப்பற்றின் அடையாளம்தான் நமக்கு தேவையான மனவலிமையை தருகிறது' என்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச சுற்றுப்பயணத்தை சீன எதிர்த்துள்ளது. இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹா சுன்யிங் கூறுகையில், "சீன-இந்திய எல்லையின் கிழக்கு பகுதிக்கு இந்திய பிரதமர் வருவதை, சீனா உறுதியாக எதிர்க்கிறது. சீனா-இந்தியா எல்லைப் பிரச்சனை பற்றிய சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. சீன அரசாங்கம் 'அருணாச்சல பிரதேசம்' என்று அழைக்கப்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை" என்றார்.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய வெளியுறவுத்துறை, "வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் 'ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி'. இந்திய தலைவர்கள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்வது போல, அருணாச்சல பிரதேசத்திற்கும் அடிக்கடி வந்து சென்றுக் கொண்டு தான் இருக்கின்றனர்" என்று பதிலடி கொடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.