scorecardresearch

வெங்கையா நாயுடுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா… பதிலடி கொடுத்த இந்தியா

சீனாவின் இது போன்ற கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி

வெங்கையா நாயுடுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா… பதிலடி கொடுத்த இந்தியா

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் பிரச்னை இருந்து வருகிறது. குறிப்பாக, லடாக்கில் கடந்தாண்டு நிகழ்ந்த மோதல் காரணமாக, இரு நாட்டினரும் எல்லையில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் குவித்தனர். இதுதொடர்பாக, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த 13 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமுகமாகத் தீர்வு கிடைத்திடவில்லை.

இந்நிலையில், கடந்த வார இறுதியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு 2 நாள்கள் சுற்றுப்பயணமாக அருணாச்சல பிரதேசம் சென்றார்.அங்கு அம்மாநில சட்டப்பேரவையிலும் உரையாற்றினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

அதில், இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகளைச் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும். அருணாசலப் பிரதேசத்திற்கு இந்தியத் தலைவரின் வருகையைச் சீனா உறுதியாக எதிர்க்கிறது” என குறிப்பிட்டிருந்தது.

ஏனென்றால், நீண்ட ஆண்டுகளாக அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இந்திய தலைவர்கள் அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கருத்துக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “சீனாவின் இது போன்ற கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. இந்தியத் தலைவர்கள் வழக்கமாக வேறு இந்திய மாநிலங்களுக்கு செல்வது போல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் பயணம் செய்கிறார்கள்.

இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மாநிலத்திற்கு இந்தியத் தலைவர்கள் செல்வதை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்குச் சீனா, இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டதுதான் காரணம்.

ஆகையால், எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா விரைவில் தீர்வு காண முயல வேண்டும். தேவையற்ற விவகாரங்களை இதில் சீனா இணைக்கக் கூடாது” என்றார்.

அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய தலைவர்கள் செல்வதற்கு சீனா கண்டனம் தெரிவிப்பது புதியது கிடையாது. முன்னதாக, 2019இல் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றதற்கும், 2020இல் உள் துறை அமைச்சர் அமித் ஷா சென்றதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும், சீனாவின் கண்டத்துக்கு இந்தியா தக்க பதில் கொடுத்துவருகிறது.

இந்தியா சீனா இடையிலான 13 ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்த இந்திய ராணுவம், ” எங்கள் தரப்பில் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் வழங்கப்பட்டது. ஆனால், சீனா தரப்பு அதை ஒப்புக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் திட்டத்தையும் அவர்கள் அளிக்கவில்லை” என்றனர்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங்கில் இந்திய வீரர்கள் 150 -க்கும் மேற்பட்ட சீனப் படைகளை எதிர்கொண்டதால் மோதல் ஏற்பட்டது. பின்னர், உயர் தலைவர்கள் வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.அதே போல, ஆகஸ்ட் மாத இறுதியில், கிட்டத்தட்ட 100 சீன வீரர்கள் உத்தரகண்டில் உள்ள பரஹோதி பகுதியின் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: China objects to venkaiah naidu arunachal visit