அருணாச்சல பிரதேசத்தில் நுழைந்த சீன குழுவினர்: சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்

சர்ச்சைக்குரிய இந்திய - சீன எல்லையான டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் சீன குழுவினர் மீண்டும் அப்பகுதிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By: January 4, 2018, 11:14:45 AM

சர்ச்சைக்குரிய இந்திய – சீன எல்லையான டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் சீன குழுவினர் மீண்டும் அப்பகுதிக்கு திரும்பியுள்ளதாகவும், அவர்களின் உபகரணங்களை இந்திய ராணுவம் பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவுக்கும், வடகிழக்கு இந்திய மாநிலமான சிக்கிம் மற்றும் பூட்டானுக்கும் இடையே சர்ச்சைக்குரிய எல்லையான டோக்லாம் பகுதி உள்ளது. சீனா மற்றும் பூட்டானுக்கு இடையே இந்த எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இதில், அப்பகுதியை பூட்டான் உரிமை கொண்டாடுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டோக்லாம் பகுதியில் சாலை அமைக்க சீன அரசு பணிகளை துவங்கியது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எல்லையில் இரு நாடுகளின் ராணுவமும் குவிக்கப்பட்டு போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பணிகளை சீன அரசு விலக்கிக்கொண்டநிலையில், அங்கு பதற்றம் தணிந்தது.

இந்நிலையில், சீன அரசு மீண்டும் அப்பகுதியில் சாலை அமைக்கும் குழுவினரை அனுப்பியுள்ளதாகவும், அவர்களின் உபகரணங்களை இந்திய ராணுவம் பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. எனினும், இந்த சம்பவத்தில் இந்திய – சீன ராணுவத்தினரின் நேரடி தொடர்பு இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய பகுதியின் இந்திய எல்லையில்
(அருணாச்சல பிரதேசம்) சீன கட்டுமானக் குழுவினர் ராணுவத்தின் துணையின்றி நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீன கட்டுமான குழுவினர் நுழைந்ததை அங்குள்ள பொதுமக்களே முதலில் கண்டு, இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் ரோந்து சென்று, சீன கட்டுமான குழுவினரை அவர்களுடைய பகுதிக்கு திரும்பி செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும், 2 ஜேசிபி இயந்திரங்கள், டேங்கர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வாகனங்களின் டயர்கள் கழற்றப்பட்டன. தற்போது அப்பகுதி இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் இந்திய ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Chinese road building team enters arunachal pradesh india seizes equipment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X