மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி வானொலியில் 'மான் கி பாத்' உரையில், 'தீவிரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது' என்றார்.
பிரதமர் மோடி பேசுகையில், "மும்பையில் 26/11 நடந்த தீவிரவாத தாக்குதலின் போது உயிரிழந்த வீரம் மிகுந்த துணிச்சலான பெண்களுக்கும், ஆண்களுக்கும் நாம் வணக்கம் செலுத்த வேண்டும். தீவிரவாதம் என்பது உலகளாவிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. உலகளவில் பரவிக் கிடக்கும் தீவிரவாதம் குறித்து முதலாவதாக குரல் எழுப்பியது நாம் தான். அதன் வரை தீவிரவாதத்தின் தீவிரத்தை யாரும் உணரவில்லை. நாம் சொன்னதை இந்த உலகம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இப்போது உலகம் பயங்கரவாதத்தின் பாதிப்பை உணர்கிறது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தைபா தீவிரவாத இயக்கம், நமது நாட்டின் வர்த்தக தலைநகரில் நகரில் நடத்திய தாக்குதலில் 166 பேர் வரை இறந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வரும் டிசம்பர் 7-ஆம் தேதி ஆயுதப் படைகள் கொடி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனால், மக்கள் அனைவரும் #armedforcesday என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இதுகுறித்த செய்திகளை பதிவிட வேண்டும்.
அதேபோன்று, நாட்டின் கடற்படை தினம் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் கடற்படை வலிமைக்கு முன்னுதாரணமாக திகழ்வது சோழர்கள்தான். உலகின் மிகச் சிறந்ததாக திகழ்ந்தது சோழர் கடற்படை. சோழர்களின் கடற்படை அதன் உச்சகட்ட வெற்றிகளை பெற்றது. சோழர் கடற்படைதான் உலகிலேயே பெண்களின் போர் திறமையை முதன் முதலில் வெளிப்படுத்தியது.
பெரும்பாலான கடற்படைகள் பெண்களை பிற்காலத்தில்தான் சேர்த்து கொண்டனர். ஆனால் சோழர் கடற்படையில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இன்றைக்கு 900 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் கடற்படையில் பெண்கள் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தனர்.
நாம் கடற்படை வலிமையைப் பற்றி பேசுகிறபோது சத்திரபதி சிவாஜியின் கடற்படையை புறக்கணித்துவிட முடியாது. கொங்கண் கடற்பரப்பில் சிவாஜியின் மராத்திய கடற்படை முக்கிய பங்காற்றியது. மராத்திய கடற்படையானது மிகப் பெரிய கப்பல்களையும் சிறிய படகுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.
டிசம்பர் 4-ந் தேதி கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். கடற்படையோடு இணைந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்" என பிரதமர் மோடி கூறினார்.