சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் நகரில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் திங்கள்கிழமை மதியம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் நகரில் உள்ள தேவாலயத்தை ஒரு கும்பல் சேதப்படுத்தியதாகவும், அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போலீஸாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் சதானந்த் குமார் தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காயம் காரணமாக, அவருக்கு தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. மேலும், சில போலீசார் காயம் அடைந்தனர்.
தேவாலயம் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய நாராயண்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலிஸாருக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்வதாகப் போலீசார் தெரிவித்தனர். ஒரு குழுவினரால் தேவாலயத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் சதானந்த் குமார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களை சந்திக்க போராட்டக்காரர்களை அழைத்தோம். கலெக்டரும் நானும் அவர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் பேசினோம். போராட்டத்தை அமைதியாக நடத்துமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு தேவாலயத்தைத் தாக்கச் சென்றனர்.” என்று கூறினார்.
“இந்தத் தகவல் தெரிந்த பிறகு, நான் எனது குழுவினருடன் சம்பவ இடத்திற்கு வந்து கும்பலைத் தடுத்து அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தேன். அவர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று யாரோ என்னை பின்னால் இருந்து தாக்கியதால் நான் காயமடைந்தேன். ஆனாலும், பொறுமையாக செயல்பட்டு கூட்டத்தை கலைத்தோம். இந்த வழக்கில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று எஸ்.பி சதானந்த் குமார் கூறினார்.
கடந்த செவ்வாய்கிழமை கர்நாடகாவில், மைசூரு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் குழந்தை இயேசுவின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தி, காணிக்கைப் பெட்டியில் இருந்த பணத்தைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மைசூரு மாவட்டம் பெரியபட்னாவில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் நடந்த இந்த சம்பவம் திருட்டு வழக்காக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“