முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டப்பிரிவு 142-யை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்டம் வழிவகை செய்தது.
இதைத்தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் சட்டப்பிரிவு 142 -யை பயன்படுத்தி தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த ஜுன் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, சட்டப்பிரிவு 142யின் சிறப்பு அதிகாரங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது. உயர் நீதிமன்றத்திற்கு இல்லை. கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் இதை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
உயர் நீதிமன்றத்தின் ஜுன் 17ஆம் தேதி உத்தரவை எதிர்த்து நளினி, ரவிச்சந்திரன் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நேற்று (செப்.26) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்கள் மீது தமிழக அரசின் நிலைபாட்டை அறிய வேண்டி உள்ளது. எனவே, இதன் மீது மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.