தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என தெரிவித்தார். இந்த மசோதாவை தாக்கல் செய்து விவாதிக்க 293 பேர் ஆதரவு தெரிவித்தனர். 82 பேர் எதிராக வாக்களித்தனர்.
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ள முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதா, மக்களவையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ( டிசம்பர் 9ம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதா, டிசம்பர் 11ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதால், எம்.பி,க்கள் தவறாது ஆஜராக வேண்டும் என்று பா.ஜ., கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த மசோதா தாக்கல் செய்ய உள்ள நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான குழுவினர், டிசம்பர் 3ம் தேதி, டில்லியில் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இன்னர் லைன் பெர்மிட் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை கடந்தவாரம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ள முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை எளிதாக வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்துக்கு மட்டும் இந்த மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்களுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் உள்ள பழங்குடி சமூக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1950ம் ஆண்டுகளில், மணிப்பூரில் நடைமுறையில் இருந்த நுழைவு மற்றும் வெளியேறுவதற்கான அனுமதி அமைப்பு திட்டத்தை மீண்டும் செயல்முறைப்படுத்துவது அல்லது உள் வரி அனுமதி திட்டத்தை மணிப்பூருக்கும் நீட்டிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுழைவு மற்றும் வெளியேறுவதற்கான அனுமதி அமைப்பு திட்டம், 1950ம் ஆண்டில் மணிப்பூரில் அமலில் இருந்தது. இந்த திட்டத்தின் படி மணிப்பூர் பகுதியை சேராதவர்கள் ( நாட்டின் மற்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஆனாலும்) அவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவர். அவர்கள் மணிப்பூரில் நுழைய உரிய கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த திட்டம் அசாமிலும் நடைமுறையில் இருந்த நிலையில், 1950 இறுதியில் இந்த திட்டம் அகற்றப்பட்டது.
உள் வரி அனுமதி திட்டம், தற்போதைய அளவில் நாகாலாந்து, மிசோராம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த மாநிலங்களை சாராதவர்கள், சிறப்பு அனுமதி பெற்றபிறகே, இந்த மாநிலங்களில் நுழைய முடியும். பிரிட்டிஷாரின் காலத்திலேயே, இந்த திட்டம் நடைமுறையில் இருப்பதாகவும், தேயிலை மற்றும் எண்ணெய் தயாரிப்பு முறைகளை பாதுகாப்பதற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் 1941-51 ஆண்டு வாக்கில் மக்கள்தொகை வளர்ச்சி 12.80 சதவீதம் இருந்தது. இது 1951-61 ஆண்டுவாக்கில் 35.04 சதவீதமாக அதிகரித்தது. 1961-71 வாக்கில், 37.56 சதவீதமாக அதிகரித்த நிலையில், இருந்த நுழைவு மற்றும் வெளியேறுவதற்கான அனுமதி அமைப்பு திட்டம் அகற்றப்பட்டது.
மணிப்பூரில் உள் வரி அனுமதி திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை 1980ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 2006 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இந்த கோரிக்கைக்காக, பெரும் வன்முறைகள் வெடித்தன. 2015 ஜூன் மாதத்தில், இதுதொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட நிகழ்வு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
உள் வரி அனுமதி திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, மொழிகள் உள்ளிட்டவைகள் வழக்கொழிந்து போகும் அபாயம் உள்ளதாக உள் வரி அனுமதி திட்ட எதிர்ப்பு போராளி லஞ்சா நிங்தெளஜா தெரிவித்துள்ளார்.
உள்வரி அனுமதி திட்டம் அல்லது நுழைவு மற்றும் வெளியேறுவதற்கான அனுமதி அமைப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்று நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டாலும், நாங்கள் எங்களது எதிர்ப்பை தெரிவித்து எங்களது மாநிலத்தை பாதுகாக்கும் எவ்வித நடவடிக்கைகளிலும் இறங்க தயங்க மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.