குடியுரிமை சட்டதிருத்த மசோதா, மக்களவையில், கடந்த திங்கட்கிழமை 311-80 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் டிசம்பர் 11 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலகட்டத்திற்குள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்குவதற்கான குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை 311 உறுப்பினர்கள் ஆதரித்தும் 80 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்ததால் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேறியது.
இதனிடையே, இந்த மசோதா, டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சமீபத்தில் பிரிந்த சிவசேனா, கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதள கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால், இந்த மசோதா, மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
சிவசேனா முரண்டு: இந்த மசோதா தொடர்பான தங்களது கேள்விகளுக்கு மத்திய அரசு உரிய பதில் அளிக்காதவரை, இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்ரே தெரிவித்தார். சிவசேனா கட்சிக்கு மாநிலங்களவையில் 3 எம்.பி.க்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய ஜனதா தள கட்சியில் பிளவு: இந்த மசோதாவுக்கு மக்களவையில் ஐக்கிய ஜனதா தள கட்சி ஆதரவு அளித்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர் பவன் கே வர்மாவுக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார், இந்த மசோதா குறித்த கட்சியின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு மாநிலங்களவையில் 6 எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ள 20 திருத்தங்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையேயும் இந்த மசோதாவை வெற்றிகரமாக நிறைவேறியது.
மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவுக்கு 83 எம்பிக்கள், அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் (6), சிரோன்மணி அகாலிதள கட்சி (3), மாநில கட்சிகளான அதிமுக (11). பிஜூ ஜனதா தள கட்சி (7), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (2) எம்பிக்கள் உள்ளனர்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மக்களவையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மசோதாவுக்கு எதிராக வாக்களித்த நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் 112 வாக்குகள் உள்ளன.
மக்களவையில் 18 எம்பிக்களை கொண்டுள்ள சிவசேனா கட்சி, மசோதாவின் புதிய நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பாதுகாப்பு, பல மாநிலங்களில் விரவியுள்ள மக்களின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான தங்களது கேள்விகளுக்கு மத்திய அரசு உரிய பதிலளிக்காதவரை, இந்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி ஆதரவு அளிக்காது என்று கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊடுருவல்காரர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாக்குரிமை வழங்காமல், வாக்கு வங்கி அரசியலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெடுப்பதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டதிருத்த மசோதா, நாட்டுமக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் பவன் கே வர்மா மற்றும் பிரசாந்த் கிஷோரும் இதே கருத்தை தெரிவித்துள்ளதால், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை திணறுவதன் மூலம், இந்த மசோதா அக்கட்சியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கண்கூடாக தெரிகிறது.
பவன் கே வர்மாவின் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மக்களவையில், ஐக்கிய ஜனதா தள கட்சி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கட்சி தலைமை மாநிலங்களவையில், இந்த மசோதா குறித்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த மசோதா, அரசியல் சட்ட அமைப்பிற்கு எதிரானது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு உதாரணமாக திகழும் இந்தியாவில், பிரிவினைவாதத்தை தூண்டுவதாக இந்த மசோதா அமைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக இந்த மசோதா அமைந்துள்ளது. மகாத்மா காந்தி இருந்திருந்தால், நிச்சயமாக இந்த மசோதாவை நிராகரித்திருப்பார் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மக்களவையில், இந்த மசோதாவை ஐக்கிய ஜனதாதள கட்சி ஆதரவு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாட்டு மக்களை அவர்கள் சார்ந்த மதங்களின் பேரால் இது பிரிக்க நினைக்கிறது. கட்சியின் அடிப்படை சிந்தாந்தங்கங்களுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, கட்சியின் நிலைப்பாடு எம்பி ராஜிவ் ரஞ்ஜன் சிங் மூலம் மக்களவையில் எடுத்துரைக்கப்பட்டது. சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என்ற தங்கள் கட்சியின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் அமித் ஷா, எவ்வித பாதிப்பு ஏற்படாது என்று பதிலளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் 125 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து 99 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்த மசோதாவை எதிர்த்து சிவசேனாவின் 3 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.