குடியுரிமைத் திருத்த மசோதா போராட்டங்களில் குவஹாத்தியில் உள்ள குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த இரண்டு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, நகரத்தின் இரண்டு தனித்தனி பகுதிகளில் இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த குடியுரிமை திருத்த மசோதா, முஸ்லிம்களை விடுத்து, இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க முற்படுகிறது.
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் வெடித்ததால், மேகாலயாவின் ஷில்லாங்கில் வியாழக்கிழமை காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெயாவ், மவ்கர், உம்ஹோசூன், ரியாட்சாம்தியா, வாஹிங்டோ, மிஷன், மவ்பிரெம், லும்டியெங்ரி, லாமவில்லா, குவாலபட்டி, வஹத்ப்ரு, சன்னி ஹில், கன்டோன்மென்ட், பவுச்சர் ரோடு, மவ்லாங் ஹாட், போலீஸ் பஜார் போலோ உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேகாலயாவில் மொபைல் இணையம் மற்றும் செய்தி சேவைகளும் 48 மணி நேரத்திற்கு தடை செய்யப்பட்டன.
இதையடுத்து, மத்திய அரசு தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. அதில், “வன்முறையை ஊக்குவிக்கவோ அல்லது தூண்டவோ அல்லது சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு எதிராக எதையும் கொண்டிருக்க கூடாது என்றும் தேச விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும்” அல்லது “ஒருமைப்பாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும்” உள்ளடக்கத்தைக் காண்பிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தது.
அதே போல, ஜம்மு காஷ்மீரிலிருந்து 50 கம்பனி மத்திய ஆயுத காவல்படையினரை வடகிழக்கு மாநிலங்களுக்கு குறிப்பாக அஸ்ஸாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், அசாமின் 10 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டங்களின் மையமான குவஹாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசாம் மற்றும் திரிபுராவில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அசாமில் பாஜக எம்எல்ஏ பினோத் ஹசாரிகாவின் வீடு சபுவாவில் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்ததோடு, மசோதா தொடர்பாக தவறாக வழிநடத்தப்படக்கூடாது என்று மக்களை வலியுறுத்தியபோதும், போராட்டக்காரர்கள் ஒரு சர்கிள் அலுவலகத்தை எரித்தனர்.
குவஹாத்தியின் லாலுங் காவ்னில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டதர்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு டெல்லி இந்தியா கேட்டில் கூடினர். அப்போது போராட்டக்காரர்கள் பாஜக எதிர்ப்பு மற்றும் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், இந்த மசோதா சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கூடாது என்று வலியுறுத்தினர்.
எதிர்ப்பு வாசகங்களை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் வலியுறுத்தியபோதும் யாரும் கலைந்து செல்லவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட பலர், போரட்டத்தை டுவிட்டர், ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்தனர். மேலும், தங்கள் செல்போன்களில் உள்ள டார்ஸ் லைட்டை ஒளிரச் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதே போல, டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு சட்ட மசோதாக நகலை எரித்தனர்.
இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில் நகரின் தனித்தனி பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2 பேர் பலியானதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.