சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. கான்ஸ்டபிளாக இருந்த ஒருவர், இதில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம்!
சிவில் சர்வீசஸ் தேர்வுகள், நாட்டின் உயர் பொறுப்புகளுக்கான தேர்வாக அமைந்திருக்கிறது. புத்திசாலித்தனத்தையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்துகிற இளைஞர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறார்கள்.
சிவில் சர்வீசஸ் தேர்வு 2017-ல் வெற்றி பெற்றிருப்பவர்களில் ஒருவர், 29 வயதான மனோஜ்குமார் ராவத். அகில இந்திய அளவில் 824-வது ரேங்க் பெற்றிருக்கிறார் ராவத். தலித் சமூகத்தை சேர்ந்தவரான ராவத், தனது கனவுப்படி ஐபிஎஸ் ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. இன்று ஐபிஎஸ் கனவை சாத்தியம் ஆக்கியிருக்கும் ராவத், இதற்கு முன்பு ஒரு கான்ஸ்டபிளாக இருந்தவர் என்பதுதான் சுவாரசியம்!
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூர் அருகே ஷ்யாம்புரா என்கிற கிராமத்தை சேர்ந்தவர் ராவத். இவரது தந்தை ஒரு ஆசிரியர்! வீட்டில் 3 குழந்தைகளில் 2-வதாக பிறந்தவர் ராவத். நடுத்தர வர்க்கத்திற்கும் சற்றே கீழான பொருளாதார சூழலில் ராவத், இளம் வயதிலேயே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
19-வது வயதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆனார் ராவத்! ஜெய்ப்பூர் புறநகர் மாவட்டத்தில் அவரது காவலர் எண் 1495! 6 ஆண்டுகள் இவர் காவலராக பணி முடித்திருந்த நிலையில், இவரது இளைய சகோதரரும் கான்ஸ்டபிள் ஆனார். தனது குடும்பத்தில் இன்னொருவரும் சம்பாதிக்க ஆரம்பித்ததால், கடந்த 2013-ல் தனது வேலையை உதறிவிட்டு முழுக்க போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தினார் ராவத்.
அப்போது ராவத்தை கேலி செய்தவர்கள் பலர்! பாதுகாப்பான அரசு வேலையை உதறிவிட்டு வீதியில் நிற்கப் போகிறாயா? என முகத்திற்கு நேராகவே பலர் அவரைக் கேட்டனர். ஆனால் தன் அறிவு மீதும், உழைப்பு மீதும் நம்பிக்கை வைத்தார் ராவத்.
‘கான்ஸ்டபிள் வேலையை ராஜினாமா செய்த பிறகு, 2014-ல் கீழ்நிலை பிரிவு எழுத்தர் பதவிக்கான தேர்வில் வென்று பணியில் சேர்ந்தேன். அதன்பிறகு மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உதவி கமாண்டன்ட் தேர்வில் வென்று பணியைப் பெற்றேன். ஆனால் அந்தப் பதவிகளையும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராவதற்காகவே ராஜினாமா செய்தேன்’ என்கிறார் மனோஜ்குமார் ராவத்.
ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டால், கான்ஸ்டபிள் பணியின்போது பெற்ற அனுபவங்களை பயன்படுத்திக் கொள்வேன் என்கிறார் ராவத். ‘நமது நாட்டின் சட்ட நடைமுறைகள், மக்களுடன் நட்பாக போலீஸார் செயல்பட வேண்டிய அவசியம், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முறை ஆகியவை குறித்து ஏற்கனவே அறிந்திருக்கிறேன். அவை மிக உதவியாக இருக்கும்’ என்கிறார் அவர்.
ஒரு தலித்தாக இள வயது அனுபவம் குறித்து பகிர்ந்த ராவத், ‘இப்போது சூழல்கள் நிறைய மாறிவிட்டன. எனது இளமைப் பருவத்தில் எங்கள் கிராமத்தில் தலித்களுக்கு தண்ணீர்கூட கொடுப்பதில்லை’ என வேதனையை வெளிப்படுத்தினார். இளம் ஆராய்ச்சி மாணவராக தேர்வு பெற்று பி.ஹெச்.டி படிப்பையும் மேற்கொண்டு வருகிறார் ராவத். இவரது பி.ஹெச்.டி. ஆய்வுத் தலைப்பு, ‘அம்பேத்கர் பார்வை : தலித் விழிப்புணர்வு மற்றும் சமூக நீதி’!
பி.ஹெச்.டி. ஆய்வு படிப்புக்காக வழங்கப்பட்ட ஊக்கத் தொகையே சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கும் உதவியதாக கூறினார் ராவத். சன்னி தியோல் நடித்த ‘இந்தியன்’ திரைப்படமே தன்னிடம் ஐபிஎஸ் கனவை விதைத்ததாகவும் குறிப்பிட்டார் ராவத்! சமூக சூழல்கள், பொருளாதாரம் ஆகியவற்றைக் கடந்து சாதிக்க, மனோஜ்குமார் ராவத் ஒரு ரோல் மாடல்!