தீபக் மிஸ்ரா மீதான ‘இம்பீச்மென்ட்’ நோட்டீஸை ராஜ்யசபை தலைவரான வெங்கையா நாயுடு நிராகரித்தது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தீபக் மிஸ்ரா, பாரம்பரியம் மிக்க இந்திய உச்ச நீதிமன்றத்தின் 45-வது தலைமை நீதிபதி! கடந்த 2017 ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தப் பொறுப்பை ஏற்றார் அவர். அதற்கு முன்பு பாட்னா, டெல்லி உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலால் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் தீபக் மிஸ்ரா.
தீபக் மிஸ்ராவின் சொந்த மாநிலம், ஒடிஸா! 1991-1992 காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ராவின் மறுமகன் இவர்! வருகிற அக்டோபர் 2 வரை (65 வயது) தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் இருக்கிறது. இதற்கிடையேதான் தீபக் மிஸ்ரா மீதான ‘இம்பீச்மென்ட்’ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தீபக் மிஸ்ரா மீது கடந்த ஜனவரி 12-ம் தேதி உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகிய 4 நீதிபதிகள் வெளிப்படையாக மீடியாவை சந்தித்து புகார் கூறினர். வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தீபக் மிஸ்ரா பாரபட்சம் காட்டுவதாக கூறினார்கள் அவர்கள்! அதைத் தொடர்ந்தே தீபக் மிஸ்ரா மீது இம்பீச்மென்ட் (நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கத் தீர்மானம்) கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.
மக்களவையில் இம்பீச்மென்ட் கொண்டு வர வேண்டுமென்றால் 100 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் கொண்டு வர வேண்டுமென்றால் 50 எம்.பி.க்களும் தேவை! மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய எண்ணிக்கை இல்லை. எனவே மாநிலங்களவை எம்.பி.க்கள் 71 பேரின் கையொப்பத்தை எதிர்க்கட்சிகள் திரட்டி வைத்தன. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வருவதாகத்தான் திட்டம்!
ஆனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நோட்டீஸ் கொடுத்ததால், இந்த விவகாரத்தை கிடப்பில் போட்டனர். அப்போது கையொப்பம் இட்டவர்களில் 7 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. எஞ்சிய 64 எம்.பி.க்களின் கையொப்பத்துடன் குடியரசு துணைத் தலைவரும் ராஜ்யசபை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் இம்பீச்மென்ட் கொண்டு வருவதற்கான நோட்டீஸை கடந்த 21-ம் தேதி காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் குலாம்நபி ஆசாத் வழங்கினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் மீது இம்பீச்மென்ட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது, இந்தியாவில் இதுதான் முதல் முறை! இந்த நோட்டீஸை அவை தீர்மானத்திற்கு எடுத்துக் கொள்வது குறித்து வெங்கையா நாயுடு பரிசீலித்து வந்தார். பொதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது இம்பீச்மென்ட், என்றால் தலைமை நீதிபதியுடன் அது குறுத்து நாடாளுமன்ற செயலகம் ஆலோசனை நடத்தும். ஆனால் தலைமை நீதிபதி மீதே இம்பீச்மென்ட் என்பதால், இதில் வெங்கையா நாயுடு என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய 7 கட்சிகள் இணைந்து கொடுத்த ‘இம்பீச்மென்ட்’ நோட்டீஸை, இன்று (ஏப்ரல் 23) காலையில் நிராகரித்து வெங்கையா நாயுடு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ராஜ்யசபை தலைவர் என்ற முறையில் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு சட்ட நிபுணர்கள் பலரிடம் வெங்கையா ஆலோசனை நடத்தினார். இறுதியாக, எதிர்கட்சிகளின் நோட்டீஸில் போதுமான முகாந்திரம் இல்லை என முடிவு செய்தார் வெங்கையா.
வெங்கையாவின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘என்னது? 64 ராஜ்யசபை எம்.பி.க்கள் கையெழுத்திட்ட இம்பீச்மென்ட் மசோதாவை துணை ஜனாதிபதி நாயுடு நிராகரித்திருக்கிறாரா? எந்த அடிப்படையில்? அந்த குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றவை எனக் கூற அவருக்கு அதிகாரம் கிடையாது. அதை விசாரணை நீதிபதிகள் மூவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் 50 எம்.பி.க்கள் கையெழுத்து இட்டிருக்கிறார்களா? நடத்தை தவறியது தொடர்பான புகார்கள் இருக்கிறதா? என்பதை மட்டும்தான் வெங்கையா நாயுடு பார்க்க வேண்டும்’ என ட்விட்டரில் கருத்து கூறியிருக்கிறார் பிரசாந்த் பூஷன்.
What!! VP Naidu rejects impeachment motion against CJI signed by 64 RS MPs! On what grounds? He has no power to say that charges are not made out. That's for the inquiry committee of 3 judges. He only has to see if it's signed by >50 MPs & possibly if charges are of misbehaviour
— Prashant Bhushan (@pbhushan1) 23 April 2018
முன்னதாக இந்திய அரசு தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி, முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரன், ராஜ்யசபை முன்னாள் செயலாளர் வி.கே.அக்னிஹோத்ரி, லோக்சபா முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், சட்டத்துறை முன்னாள் செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா மற்றும் ராஜ்யசபை செயலக மூத்த அதிகாரிகளுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.
எதிர்கட்சிகளின் இந்த ‘மூவ்’ குறித்து மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன், ‘உச்சநீதிமன்ற வரலாற்றில் இது கருப்பு தினம்’ என ஏற்கனவே கூறியிருந்தார். ‘எதிர்கட்சிகளின் இந்த முயற்சி நீதித்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை குறைப்பதுடன், ஆளும்கட்சி விரும்புகிற தீர்ப்பு வராதபட்சத்தில் அந்த நீதிபதிக்கு எதிராக இயங்குவதற்கான வாசலை திறந்து வைத்திருக்கிறது’ என்றும் ஃபாலி நாரிமன் குறிப்பிட்டார். ‘தரைத் தளத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தை, பேஸ்மென்ட் பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்’ என்றும் எதிர்கட்சிகளின் அணுகுமுறையை விமர்சித்தார் ஃபாலி நாரிமன்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘நீதிபதியை நீக்கக் கோருவதற்கு நடத்தை தவறியதாக சொல்லப்படும் புகார்கள் போதுமானவை அல்ல. அவை நிரூபிக்கப்பட்ட புகார்களாக இருக்க வேண்டும்’ என்றார்.
கே.ஜி.பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் -ஐ இம்பீச்மென்ட் மூலமாக பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘எனது கவலை நீதித்துறை குறித்துதான்! இப்போதைய நிகழ்வுகள் அதிக வலியைத் தருகின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கடந்த 2014-ல் ஓய்வுபெற்ற ஆர்.எம்.லோதாவும், இம்பீச்மென்ட் முயற்சியை ‘சோகமான நாள்’ என வர்ணித்தார்.
காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத்தும், கபில்சிபலும்தான் முன்னின்று இம்பீச்மென்ட் முயற்சியை எடுத்தனர். ஆனால் அதே கட்சியில் மன்மோகன் சிங் இதில் கையொப்பம் இடவில்லை. இது குறித்து கபில்சிபல் கூறுகையில், ‘முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் அவரிடம் நாங்கள் கேட்கவில்லை’ என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களான முன்னாள் சட்ட அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், அஸ்வனி குமார் ஆகியோரும் இதில் கையெழுத்து இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான் குர்ஷித் கூறுகையில், ‘இந்த விஷயத்தில் என்னை யாரும் ஆலோசிக்க வில்லை. நடந்த நிகழ்வுகள் வருத்தத்திற்கு உரியவை.’ என்றார். காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக மற்றும் அண்மையில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்த தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த இம்பீச்மென்டை ஆதரித்து கையெழுத்திடவில்லை.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘பழிவாங்கும் மனு இது’ என எதிர்கட்சிகளின் நோட்டீஸை விமர்சித்தார். ‘நீதிபதி லோயா மரண விவகாரத்தில் காங்கிரஸின் பொய்கள் அம்பலமானதால், இந்த பழிவாங்கும் மனுவை தொடுக்கிறார்கள். இதர நீதிபதிகளுக்கும் இதன் மூலமாக ஒரு செய்தியை விடுக்கிறார்கள். எங்களுக்கு இணக்கமாக நடந்து கொள்ளாவிட்டால், 50 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்க முடியும் என இதன் மூலமாக உணர்த்துகிறார்கள்’ என எதிர்க்கட்சிகளை சாடினார் அருண் ஜெட்லி.
எதிர்கட்சிகளின் முயற்சி தோற்றதா? ஆளும்கட்சி முறியடித்ததா? என்பதைத் தாண்டி இந்திய நீதித்துறைக்கு நெருக்கடியான காலகட்டம் இது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.