உச்சநீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மை உருவாகியிருக்கிறது. முதல் முறையாக துறை ரீதியாக வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பெயர் அறிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் எந்தெந்த வழக்குகளை எந்த நீதிபதி விசாரிப்பது? என்பதை தலைமை நீதிபதியே தீர்மானித்து வந்தார். இது தொடர்பாக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், மதன் பி.லோகூர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் ஆகியோர் 3 வாரங்களுக்கு முன்பு சில பிரச்னைகளை வெளிப்படையாக மீடியா முன்பு வைத்தனர்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் மூத்த நீதிபதிகள் நால்வர் வெளிப்படையாக மீடியாக்கள் முன்பு தோன்றி, தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் குறித்து விமர்சன கருத்துகளை முன்வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவே மேற்படி 4 மூத்த நீதிபதிகளையும் சில முறை சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து முதல் முறையாக உச்சநீதிமன்றத்தில் எந்தெந்த நீதிபதிகள், எந்தெந்த வழக்குகளை விசாரிப்பார்கள் என துறை ரீதியாக பட்டியல் இடப்பட்டிருக்கிறது. அது தொடர்பான விவரங்கள், பிப்ரவரி 1-ம் தேதி உச்சநீதிமன்ற அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் இது வெளியிடப்பட்டது.
அதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பொதுநல வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறார். மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் குற்ற வழக்குகள், நீதித்துறை அலுவலர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பார். சுற்றுச் சூழல் வழக்குகளை மற்றொரு மூத்த நீதிபதியான மதன் பி.லோகூர் விசாரிக்க இருக்கிறார்.
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கை, இடமாற்றம் தொடர்பான வழக்குகளை முறையே எஸ்.ஏ.பாப்டே, அருண் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான தனித்தனி பெஞ்ச்கள் விசாரிக்கும். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி தவிர்த்த இதர கல்வி சம்பந்தமான வழக்குகளை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்கும். பிப்ரவரி 5 முதல் இது அமுலாகும். இந்த பணி ஒதுக்கீடு சுழற்சி முறையில் அமலாகும். மேலும் புதிய வழக்குகளுக்கே இது பொருந்தும்.
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளை உள்ளடக்கிய ‘கொலிஜியம்’ கடந்த 10-ம் தேதி முடிவு செய்தபடி நீதிபதிகளின் பதவி உயர்வு பட்டியலையும் உச்சநீதிமன்ற வெப்சைட்டில் வெளியிட்டனர். அந்த அறிவிப்பின்படி, மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிறார்கள்.
சுழற்சி முறையில் நீதிபதிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்க முடிவு செய்திருப்பது, 4 மூத்த நீதிபதிகளும் குரல் எழுப்பியதற்கு கிடைத்த தார்மீக வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், எதிர்காலத்தில் தலைமை நீதிபதிகளாக வர வாய்ப்பு உள்ளவர்களை உள்ளடக்கி ஒரு குழு அமைத்து, அவர்கள் மூலமாக வழக்குகளை ஒதுக்கீடு செய்வது குறித்து ஒரு அமைப்பை உருவாக்க 4 மூத்த நீதிபதிகளும் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத் தக்கது.