/indian-express-tamil/media/media_files/2025/09/18/cji-gavai-2-2025-09-18-18-37-19.jpg)
தலைமை நீதிபதி கவாய், மனுதாரருக்கு “கஜுராஹோவில் உள்ள மிகப் பெரிய லிங்கங்களில் ஒன்றான சிவன் கோவிலும் உள்ளது” என்று தான் அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் உள்ள விஷ்ணு சிலை மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அண்மையில் விசாரித்தபோது, தான் கூறிய வாய்மொழி கருத்துகள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வியாழக்கிழமை அன்று தெரிவித்தார்.
கஜுராஹோ கோவிலின் பராமரிப்பு இந்திய தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.ஐ) அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்ற பின்னணியில் தனது கருத்துகள் கூறப்பட்டன என்று தலைமை நீதிபதி கவாய் விளக்கினார். “நான் எல்லா மதங்களையும் நம்புகிறேன், எல்லா மதங்களையும் மதிக்கிறேன்” என்று அவர் கூறினார்.
நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வுக்குத் தலைமை வகித்த தலைமை நீதிபதி, செப்டம்பர் 16-ம் தேதி கஜுராஹோ கோவில் வளாகத்தில் உள்ள ஜாவரி கோவிலில் சிதிலமடைந்த 7 அடி உயர விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
“இது முற்றிலும் விளம்பரத்திற்கான வழக்கு… நீங்கள் நேரடியாக கடவுளிடமே சென்று ஏதாவது செய்யுமாறு கேளுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொன்னால், நீங்கள் பிரார்த்தனை செய்து தியானம் செய்யுங்கள்” என்று தலைமை நீதிபதி கவாய் மனுதாரரிடம் கூறினார்.
வியாழக்கிழமை, கர்நாடகாவில் பெரிய அளவிலான சட்டவிரோத இரும்புத் தாது சுரங்கம் தொடர்பான ஒரு விவகாரத்தை தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்துக்கொண்டிருந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முந்தைய விசாரணைகளின் போது மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியானது குறித்து சுட்டிக்காட்டினார்.
அப்போது, சமூக ஊடகங்களில் தன்னைச் சித்தரித்தது பற்றி தலைமை நீதிபதி கவாய் தனது கவலைகளைத் தெரிவித்தார். செப்டம்பர் 16-ம் தேதி தான் கூறிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் புயலை கிளப்பியது பற்றி குறிப்பிட்டு, “சமூக ஊடகங்களில், இப்போதெல்லாம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். நேற்று முன்தினம், ‘நீங்கள் தள்ளுபடி செய்யும் விதத்தில் ஏதோ சொன்னீர்கள்’ என்று ஒருவர் என்னிடம் சொன்னார்” என்று கவாய் கூறினார்.
“எனக்கு கடந்த 10 ஆண்டுகளாக தலைமை நீதிபதியைத் தெரியும், என் ஐயா எல்லா மதங்களின் கோவில்களையும் இடங்களையும் மரியாதையுடன் பார்வையிடுபவர். இது தீவிரமான விஷயம். நியூட்டனின் விதிப்படி - ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு - ஆனால் இப்போது ஒவ்வொரு வினைக்கும் சமூக ஊடகங்களில் மிகையான எதிர்வினை உள்ளது” என்று மேத்தா கூறினார்.
“கஜுராஹோவிலுள்ள மிகப் பெரிய லிங்கங்களில் ஒன்றான சிவன் கோவிலும் உள்ளது” என்று மனுதாரருக்கு தான் அறிவுறுத்தியதாகவும் தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.