கொலிஜீயம் பரிந்துரை விரைவில் ஏற்கப்படும்… என்.வி ரமணாவுக்கு உறுதியளித்த சட்ட அமைச்சர்

அக்டோபர் 1 நிலவரப்படி, உயர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்கள் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் நாடு தழுவிய சட்ட விழிப்புணா்வு பிரச்சாரம் டெல்லியில் சனிக்கிழமை தொடங்கியது. சுதந்திர தின பவள விழாவின் ஒரு பகுதியாக 6 வாரம் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ” இந்தாண்டு மே மாதத்திலிருந்து பல்வேறு உயா்நீதிமன்றங்களுக்கு 106 நீதிபதிகள், 9 தலைமை நீதிபதிகளின் பெயர்களை கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது. அதில், இதுவரை 7 நீதிபதி மற்றும் 1 தலைமை நீதிபதிக்கு தான், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எஞ்சியிருக்கும் பரிந்துரைகளுக்கும் ஒரிரு நாள்களில் ஒப்புதல் அளிக்கப்படும் என மத்திய சட்டத் துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். அதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நியமனங்கள் ஓரளவிற்கு நிலுவையில் இருக்கும் வழக்குகளை கையாள உதவியாக இருக்கும்.நீதித்துறை மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்த அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நான் நாடுகிறேன்” என தெரிவித்தார்.

ஹரியானா , டெல்லி ,
தெலுங்கானா, குஜராத், ஆந்திரா , ஒடிசா , ராஜஸ்தான், பாட்னா உயர் நீதி மன்றங்களில் நீதிபதிக்கான மொத்த இடங்களில் பாதிக்கும்
மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. நீதித்துறை தகவலின் படி, மே 1, 2021 அன்று உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 420 காலியிடங்கள் இருந்தன. ஆனால், அக்டோபர் 1 நிலவரப்படி, உயர் நீதிமன்றங்களின் காலியிடங்கள் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந்த், ” ஒரு நாடாக, பெண்களின் வளா்ச்சி என்பதிலிருந்து பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என உயா்த்துவதே நமது இலக்கு. அதனால், தேசிய சட்ட சேவை நிறுவனங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியது முக்கியம். இதன்மூலம் அதிக அளவிலான பெண் பயனாளிகளுக்கு பலன் கிடைக்கும்.

தற்போது மாவட்ட அளவில் சட்ட உதவி மையங்களில் உள்ள 47 ஆயிரம் வழக்கறிஞர்களில், சுமார் 11,000 பெண் வழக்கறிஞர்கள் ஆவர். மேலும், நீதியை நிலைநாட்ட சட்ட மையம் மற்றும் மக்களுக்கு இடையே பாலமாக இருக்கும் PLV (para legal volunteers) 44,000 பேரில் சுமார் 17 ஆயிரம் பெண்கள் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதியும், நல்சா நிர்வாகத் தலைவருமான நீதியரசர் யு யு லலித் மற்றும் நீதிபதி ஏ எம் கான்வில்கர் ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள்

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cji ramana says expect govt to clear sc collegium recommended names

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com