உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பள்ளியிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு செல்வதற்காக ஒன்றாம் வகுப்பு மாணவனை, ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் உள்ள திரிவேணி நகரில் செயல்பட்டு வரும் பிரைட்லேண்ட் இண்டர்காலேஜ் பள்ளியில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து, காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது,
பாதிக்கப்பட்ட சிறுவனின் வயிறு, மார்பு பகுதிகளில் ஆறாம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி, பள்ளி கழிவறையின் உள்ளே அடைத்து தாழிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அச்சிறுவனின் கதறலை கேட்டு பள்ளி நிர்வாகிகள், அச்சிறுவனை மீட்டபோது, சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், வாயில் துணியால் அடைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுவனிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பள்ளிக்கு பாதியிலேயே விடுமுறை அளித்து வீட்டுக்கு சீக்கிரம் செல்வதற்காக குத்தியதாக அந்த மாணவி கூறியதாக சிறுவன் தெரிவித்துள்ளான். இதையடுத்து, அச்சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, பள்ளி நிர்வாகம் இச்சம்பவம் குறித்து சரியான நேரத்தில் சிறுவனின் பெற்றோருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.