கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இந்தக் கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கிட்டத்தட்ட மெஜாரிட்டியை நெருங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகளை நிராகரித்துள்ள முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பசவராஜ் பொம்மை, “ஒவ்வொரு கருத்துக் கணிப்புகளும் ஒவ்வொரு விதமான கணிப்புகளை கூறுகின்றன. முழுமையான தகவல் மே 13 வாக்கு எண்ணிக்கையின்போது கிடைத்துவிடும்” என்றார்.
தொடர்ந்து, 'பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால் இந்த முறை ரிசார்ட் அரசியல் இருக்காது. ஜே.டி (எஸ்) கிங் மேக்கராக மாற வேண்டியதில்லை” என்றார்.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான பி.எஸ். எடியூரப்பா, “மக்களின் நாடித் துடிப்பை நான் அறிவேன், அறுதிப் பெரும்பான்மையுடன் 115 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சி அமைப்போம்.
தொங்கு சட்டசபை என்ற கேள்வி எழவே இல்லை. நாம் ஜே.டி.எஸ் உடன் கைகோர்க்க வேண்டியிருந்தாலும், தேசிய தலைமைதான் அழைப்பு விடுக்கும்” என்றார்.
இதற்கிடையில் முன்னாள் முதல் அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சித்த ராமையா, “130-150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தேன். அதே போல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த முறை அனைத்து பிராந்தியங்களிலும் சிறப்பாக செயல்படுவோம். கடலுார் மாவட்டத்தில், 13 மாவட்டங்களில், கடந்த சட்டசபை தேர்தலில், ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தோம், ஆனால், இந்த முறை அதிக வெற்றி பெறுவோம்” என்றார்.
தொடர்ந்து, பஜ்ரங் தளம் தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த சித்த ராமையா, “இது தேர்தல் பிரச்னை இல்லை. நாங்கள் தேர்தல் அறிக்கையில் மதவாத சக்திகள் எனத் தெரிவித்திருந்தோம்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், “கருத்துக் கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. களத்தில் உள்ள அறிக்கை என்னிடம்உள்ளது, நாங்கள் 141 இடங்களில் வெற்றி பெறுவோம். இந்த முறை தொங்கு சட்டசபை அல்லது கூட்டணி ஆட்சி என்ற கேள்விக்கே இடமில்லை” என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றிகள். முற்போக்கான எதிர்காலத்திற்காக வாக்களிக்க அதிக அளவில் வந்துள்ள கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி கடும் நெருக்கடியில் உள்ளார். அவரின் கட்சி எதிர்பார்த்த இடங்களில் சரியாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கு நிதி நெருக்கடி காரணம் எனக் கூறும் குமாரசாமி, சில இடங்களில் சரியான நிதி உள்ளிட்ட ஆதரவை வழங்க இயலவில்லை. அவர்களை ஆதரிக்க முடியாமல் போனது என் தவறு” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“