மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக பெரும் வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, ஒரேயொரு மக்களவை தொகுதியை மட்டுமே வென்றது. இந்தநிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில் இன்று(ஜூன்.15) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் சென்றனர்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நேற்றிரவு தங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று (ஜூன் 15) நிதி ஆயோக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரும் கோரிக்கைகள் அடங்கிய மனுவினையும் பிரதமரிடம் சமர்ப்பித்தார். குறுகிய நேரம் மட்டும் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்திக்காமலேயே முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழகத்திற்கான நிதி விவகாரங்கள் தொடர்பாகவும், கூடுதல் திட்டங்கள் ஒதுக்கும்படி அவரிடம் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த முதல்வர் பழனிசாமி, மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும் காவிரியில் கர்நாடகா தண்ணீரை திறந்து விடவும் கோரிக்கை வைத்தார்.
June 2019
முன்னதாக, கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி மனு அளித்திருந்தார். அதில், தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எந்த விதமான விதிமுறைகளோ, சட்டமோ இல்லை. தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என குமாரசாமியின் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், முதல்வர் மத்தியில் வைத்த இந்த அனைத்து கோரிக்கைகளுக்கும் முழுவதுமாக பதில் கிடைக்குமா, ஒரளவுக்கு பதில் கிடைக்குமா அல்லது வழக்கமான நடைமுறையாக இது கடந்து சென்றுவிடுமா என்பது போக போகத் தான் தெரியவரும்.