கமல்ஹாசன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என அகில பாரத இந்து மகா சபை தலைவர் பண்டிட் அஷோக் ஷர்மா கூறியிருந்தார். இதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாரப்பத்திரிகை ஒன்றில் கடந்த சில வாரங்களாக கமல்ஹாசன் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அப்பத்திரிகையின் இவ்வார இதழில் கேரள முதல்வர் பிணராயி விஜயனின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்திருக்கிறார். தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ விரும்பும் இந்துத்துவ சக்திகள் பற்றிய கேள்விக்கு, ‘எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள் என்ற சவாலை, இந்துத்துவ சக்திகளால் விட முடியாத அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது’ என பதிலளித்திருக்கிறார் கமல்.
கமலின் இப்பதிலுக்கான அகில பாரத இந்துமகாசபை தலைவரின் எதிர்வினையை ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. கமல் போன்றோர் சுடப்பட்டோ தூக்கிடப்பட்டோ கொல்லப்பட்டால்தான் மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்றும் இந்து மதத்தையும், இந்து மதத்தை சார்ந்தவர்களையும் அவதூறாக பேசுபவர்கள் இந்த புண்ணிய பூமியில் வாழக்கூடாது என்றும் அவர்களுக்கு மரணம்தான் பதிலாக தரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "கமல்ஹாசனின் பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தும் வகையில், அவரை கொலை செய்ய வேண்டும் என ஹிந்து மகாசபை தலைவர்கள் மிரட்டியுள்ளதற்கு நான் எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். இது போன்று கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த ஒட்டுமொத்த தேசமும் மகாத்மா காந்திக்கும், பன்சாரேவுக்கும், கல்புர்கிக்கும், தபோல்கர் மற்றும் கௌரி லங்கேஷ்கும் என்ன நடந்தது மற்றும் ஏன் நடந்தது என்பது தெரியும். நாட்டை சீர்குலைக்க எவரும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்" என்று தனது ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.