Advertisment

‘சாலையில் அமர்ந்து தர்ணா’ நடத்திய கேரள ஆளுநர்: எஸ்.எஃப்.ஐ தாக்குதலுக்குப் பிறகு இசட் ப்ளஸ் பாதுகாப்பு

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், சாலையோர கடையின் முன், எஸ்.எப்.ஐ.காரர்கள் அவரது வாகனத்தை தாக்கியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து ஆளுநர் போராட்டத்தை முடித்தார்

author-image
WebDesk
New Update
kerala arif mohammed khan

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் (கோப்பு படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Shaju Philip

Advertisment

இந்திய மாணவர் கூட்டமைப்பினர் (SFI) ஆளுநரின் காரை தாக்கியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையோரக் கடையின் முன் ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கேரளாவில் ராஜ்பவனுக்கும் சி.பி.ஐ (எம்) (CPI (M)) அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் சனிக்கிழமை மோசமடைந்தது.

ஆங்கிலத்தில் படிக்க: ‘CM promoting lawlessness’: Kerala Governor Arif Mohammed Khan gets Z+ security after faceoff with SFI

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொல்லத்தில் உள்ள நிலமேலில் ஆரிப் முகமது கான் முன்னோடியில்லாத போராட்டத்தை நடத்தினார், “முதலமைச்சர் (பினராயி விஜயன்) மாநிலத்தில் சட்ட விரோதத்தை ஊக்குவிக்கிறார். சட்ட விரோதம் அனுமதிக்கப்படாது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது முதல்வர் தான். அவர்கள் முதல்வரின் தினக்கூலிகள் மட்டுமே. இதற்கெல்லாம் முதல்வர் தான் பொறுப்பு,'' என்று ஆரிப் முகமது கான் கூறினார். 17 எஸ்.எஃப்.ஐ செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) வாசித்த பிறகுதான் ஆரிப் முகமது கான் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

இந்த மோதலைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம், சி.ஆர்.பி.எஃப்-ன் Z+ பாதுகாப்பு கவர்னருக்கு நீட்டிக்கப்படுவதாக கேரள ராஜ்பவனுக்குத் தெரிவித்துள்ளது.

சி.பி.ஐ (எம்)ன் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களை "சங்கபரிவார் ஆட்களால்" நிரப்புவதாகக் குற்றம் சாட்டி ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது.

கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் நடந்த ஒரு விழாவில் ஆரிப் முகமது கான் கலந்து கொள்ளச் சென்றபோது, ​​SFI அமைப்பின் ஒரு குழு ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆளுநரின் கான்வாய்க்காகக் காத்திருந்த அவர்களில் சிலர் கொடிகளுடன் ஆளுநரின் காரின் முன் பாய்ந்தனர். ஆரிப் முகமது கான் உடனடியாக காரை நிறுத்தி, பணியில் இருந்த உள்ளூர் போலீசாரிடம் கடிந்துக் கொண்டார்.

சம்பவ இடத்தில் இருந்து காணாமல் போன போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஆரிப் முகமது கானை, மூத்த போலீஸ் அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றனர். தனக்கு எதிராக எஸ்.எப்.ஐ.வினர் போராட்டம் நடத்துவதை தடுக்காததால், போலீஸ் அதிகாரிகள் மீது கவர்னர் கோபமடைந்தார்.

காவல்துறையினரை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய ஆரிப் முகமது கான் ஒரு நாற்காலியை எடுத்து சாலையில் போட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்தார். இதற்கிடையில், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவரின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.

பின்னர், 12 பெயர்களைக் குறிப்பிட்டு 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, எப்.ஐ.ஆருடன் ஆளுநரை போலீஸார் சந்தித்தனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முன், ஆரிப் முகமது கான் ஊடகங்களிடம், “நான் இங்கு வந்தபோது, ​​சிலர் எனது காரை தாக்க முயன்றனர். தூரத்தில் இருந்து கருப்புக்கொடி காட்டினால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் யாராவது என் காரின் அருகில் வந்தால், நான் கீழே இறங்குவேன். 17 பேர் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர், தற்போது இங்கு இருக்கும் காவலர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். எனது ஒரே கேள்வி என்னவென்றால், முதல்வர் இந்த சாலை வழியாகச் சென்றால், போராட்டக்காரர்கள் காரை அடிக்க காவல்துறை அனுமதிப்பார்களா?” என்று கூறினார்

நான் காவல்துறையைக் குறை கூறவில்லை. போலீஸார் உயரதிகாரிகளின் உத்தரவை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் சட்ட விரோதத்தை கேரள முதல்வர் ஊக்குவித்து வருகிறார். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் அறிவுறுத்துகிறார். அவர்களில் பலர் பல குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். காவல்துறையைக் குறை சொல்லக் கூடாது. போராட்டக்காரர்களுக்கு முதல்வர் பாதுகாப்பு அளித்து வருகிறார். அவர்கள் முதல்வரின் தினக்கூலிகள்,'' என்று ஆரிப் முகமது கான் கூறினார்.

போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாகவும் ஆனால் 17 பேர் மீது மட்டுமே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரிப் முகமது கான் கூறினார். போலீசார் SFI ஆட்களை அகற்றியிருக்க வேண்டும். அவர்கள் இப்படி செய்ய வேண்டும் என முதல்வர் விரும்பியதால், அவர்களை அகற்றவில்லை. இது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல. இது சட்டவிரோதம், அனுமதிக்க முடியாது. நவ கேரளா சதாஸ் (கடந்த ஆண்டு அமைச்சரவையின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம்) பேருந்து அருகே வந்தவர்களிடம் காவல்துறை என்ன மாதிரி நடந்துக் கொண்டது? என்று ஆரிப் முகமது கான் கூறினார்.

கடந்த மாதம், திருவனந்தபுரத்தில் SFI ஆட்கள் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டியபோது, ​​​​ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது காரில் இருந்து இறங்கி, போராட்டக்காரர்களை நோக்கி, "இரத்தம் தோய்ந்த குற்றவாளிகளே, வாருங்கள்" என்று கூறி சென்றார். பின்னர், போலீசாரை நோக்கி திரும்பிய ஆரிப் முகமது கான், “அவர்கள் எப்படி என் அருகில் வந்தார்கள்? இங்குள்ள போலீஸ் அதிகாரி யார்? அவர்கள் (போராட்டக்காரர்கள்) என் காரை தாக்கும் குற்றவாளிகள்,” என்று கூறினார். தன்னை உடல் ரீதியாக காயப்படுத்த பினராயி விஜயன் குண்டர்களை அனுப்பியதாக அப்போது ஆளுநர் குற்றம் சாட்டினார்.

கடந்த வாரம், அரசாங்கத்துடனான ஆளுநரின் மோதல் விவகாரம், ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் கொள்கை உரையை வெறும் 80 வினாடிகளாகக் குறைத்ததிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம். உரையாற்றிய பின், ஆளுநர் கோபத்துடன் சபையை விட்டு வெளியேறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

kerala Governor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment