/indian-express-tamil/media/media_files/2025/10/11/pdy-cm-rangasamy-2-2025-10-11-00-18-11.jpg)
புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் தொகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமி பூஜை, கிராம வருவாய் அலுவலகம் திறப்பு விழா, மடுகரையில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நலத்திட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான கடந்த காங்கிரஸ் - தி.மு.க ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி மாநிலம் எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என்றும், கடந்த பத்தாண்டில் மாநிலம் பின்தங்கிப் போய்விட்டது என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், வீட்டு வசதித் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் அவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் தொகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமி பூஜை, கிராம வருவாய் அலுவலகம் திறப்பு விழா, மடுகரையில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நலத்திட்ட நிகழ்வுகளில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரங்கசாமி பெருமிதம் தெரிவித்தார். அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
இலவச விநியோகம்: இதுவரை வழங்கப்படாத மாதங்களுக்கும் சேர்த்து இலவச அரிசியும், கோதுமையும் விரைவில் வழங்கப்படும்.
தீபாவளிப் பரிசு: தீபாவளிப் பண்டிகைக்காக ரூ.570 மதிப்பிலான இலவசத் தொகுப்பு விரைவில் விநியோகம் செய்யப்படும்.
முதியோர் உதவித்தொகை: கூடுதலாக 5,000 பேருக்கு டிசம்பர் மாதம் முதல் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
விரைவில் 4,500 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்
பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
புதுச்சேரியில் விரைவில் 4,500 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அடுத்த மாதம் எல்.டி.சி (LDC) மற்றும் யு.டி.சி (UDC) பணியிடங்கள் நிரப்பப்படும்.
அரசுப் பொது மருத்துவமனைக்குத் தேவையான 100 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு
உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை அரசு முழுமையாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, கல்விக் கட்டணங்கள் குறித்தும் பேசினார்.
தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும். தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் கேட்பது குறித்துப் புகார் உள்ளது. அதையும் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கொடுக்கலாமா? என்ற எண்ணம் அரசுக்கு இருக்கிறது.
மடுகரையில் விரைவில் அரசு மகளிர் கலைக் கல்லூரி கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கிராமப்புற விவசாயிகள் ஒத்துழைத்தால், கிராமப் பகுதிகளில் 40 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நகரப் பகுதிக்குக் குடிநீர் கொண்டு செல்ல முடியும்; இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், முதியோர் உதவித்தொகை, செல்வமகள் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்கான ஆணை, தொடர் நோயைக் குணப்படுத்த நிதியுதவிக்கான மாதந்திர அடையாள அட்டை மற்றும் மொளப்பாக்கம் கிராமத்தில் இலவச மனைப் பட்டா வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அவர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.