கேரளா மாநிலத்தில் தொடர் மழை காரணமாக ஊரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழைக்கு இதுவரை சுமார் 29 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். முதல்வர் பினராயி விஜயனுடன், கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் இணைந்து சில இடங்களில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் அணைகள் அனைத்திலும் நீர் நிரம்பத் தொடங்கிவிட்டன.
மேலும் இதுவரை இல்லாத வகையில் சுமார் 22 அணைகளிலும் நீர் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இடுக்கி, வயநாடு, மற்றும் இதர சுற்றுவட்டாரப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட பினராயி விஜயன்
இடுக்கி, அலாப்புழா, வயநாடு, எர்ணாக்குளம் மற்றும் கோழிக்கோடு பகுதிகள் இந்த மழையால் பெருத்த சேதம் அடைந்துள்ளன. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
அவருடன் வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் கேரள சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் பினராயி விஜயனுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக சென்று வெள்ளச் சேதங்களை பார்வையிட்டது முன்மாதிரியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற போது
இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டன
கேரளா மழை காரணமாக இடுக்கி அணை சுமார் 26 வருடங்கள் கழித்து நிரம்பியது. அந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து அதன் மதகுகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டு உபரி நீர் சிறுதொணி ஆற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ள
வெள்ளத்தினையும் பொருட்படுத்தாது குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய காவலர்
இடுக்கி அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் கேரளாவில் நிலை இன்னும் மோசமானதாக மாறியது. அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒரு பாலத்தின் உயரத்தையும் தாண்டி வெள்ள நீர் வந்து கொண்டிருந்த போது தன்னுடைய உயிரையினையும் பொருட்படுத்தாது குழந்தை ஒன்றைக் காப்பாற்றிய பாதுகாப்பு படைவீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒளிபதிவில் அக்காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர் அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடி வரும் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கிறது. இதுவரை இந்த மழைக்கு 29 நபர்கள் பலியாகி உள்ளனர். சுமார் 50,000 பேர் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மழை வெள்ளத்திற்கு இதுவரை 29 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை கேரளா எதிர்கொள்கிறது. மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இதர தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கேரள வெள்ளச் சேதங்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிட இருக்கிறார்.
வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.