கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்களில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குகள் நேற்று முன்தினம் (மே.15) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. 104 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், 221 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே கைப்பற்ற, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.
தனிப்பெரும் கட்சியான பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார். அதேசமயம், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்து தங்களுக்கு போதிய மெஜாரிட்டி இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமை கோரியது.
இறுதியில், நேற்று இரவு பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ், ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அவசர வழக்காக விசாரிக்கவும் கோரியது. விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில், எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. எனினும், ஆளுநர் தெரிவித்தது போல் 15 நாட்களுக்குள் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இந்நிலையில், இன்று காலை எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் எடியூரப்பா கையெழுத்திட்டார். இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5000 ரூபாய் முதல் 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.