நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானா மற்றும் ஆனந்த்பூர் சாஹிப்பில் நடந்த பேரணிகளில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பஞ்சாப் "நிலம், போதைப்பொருள் மற்றும் மணல் மாஃபியாவின் குகையாக" மாறியுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், இந்த மாஃபியா குழுக்களை நசுக்க உத்தரப் பிரதேசத்தின் புல்டோசர்களை அனுப்புவதாகக் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Will send UP bulldozers to crush Punjab mafia: CM Yogi
பா.ஜ.கவின் லூதியானா வேட்பாளர் ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் ஆனந்த்பூர் சாஹிப் வேட்பாளர் சுபாஷ் சர்மா ஆகியோருக்கு ஆதரவாக தனித்தனி பேரணிகளில் உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "பஞ்சாபின் புனித பூமி ஆம் ஆத்மி அரசாங்கம் மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியினால் அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸும் ஆம் ஆத்மியும் பஞ்சாப் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த அரசுகளின் அலட்சியத்தால்தான் நில மாபியா, போதைப்பொருள், மணல் மாபியாக்களின் கூடாரமாக மாநிலம் மாறியுள்ளது. இந்த மாஃபியாக்கள் நசுக்கப்பட வேண்டும். இதற்கு லூதியானா மற்றும் ஆனந்த்பூர் சாஹிப் மக்கள் வாக்களித்து பா.ஜ.க வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மாஃபியாக்களை நசுக்க உ.பி.யில் இருந்து ரவ்னீத் சிங் பிட்டு மற்றும்சுபாஷ் சர்மாவுக்கு புல்டோசர்களை அனுப்புவேன். பஞ்சாபில் பா.ஜ.க அடுத்த ஆட்சியை அமைத்தால், 48 மணி நேரத்தில் மாஃபியா குழுக்களை ஒழித்துவிடுவோம்” என்று அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை பா.ஜ.க மூத்த தலைவர்கள் வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தவிர, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமிர்தசரஸில் தரன்ஜித் சிங் சந்துவுக்கு ஆதரவாகவும், ஃபரித்கோட்டில் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் சுபாஷ் சர்மாவுக்காக ஆனந்த்பூர் சாஹிப்பின் நங்கல் ஆகிய இடங்களிலும் பேரணிகளில் உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“