அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட காக்னிசண்ட் நிறுவனம், இந்தியாவில் 18 ஆயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் களமறிங்கியுள்ளது. இதன்காரணமாக, தகவல்தொழில்நுட்பதுறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை காரணம் காட்டி,பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நாட்டின் பலபகுதிகளில் இயங்கி வந்த 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ராஜினாமா செய்ய வற்புறுத்திவரும் காக்னிசண்ட் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிலாளர் யூனியன், கர்நாடக அரசின் உதவியை நாடியுள்ளது.
கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் பெரும் முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், தங்களது நிறுவனத்திற்கு போதுமான புராஜெக்ட்டுகள் வருவதில்லை. இதன்காரணமாக நிறுவனத்திவ் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவன ஊழியர்களை அழைத்துள்ள காக்னிசண்ட் நிறுவனம், அவர்களிடம் தாங்களாகவே ராஜினாமா செய்ய வற்புறுத்திவருகிறது. இதனால், பாதிப்படைந்த பணியாளர்கள், கர்நாடக மாநில தகவல்தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் யூனியனில் புகார் அளித்தனர். அவர்கள் இதனை, மாநில தொழிலாளர் நலத்துறையின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக, ஊடகங்களை சந்தித்த தொழிலாளர் யூனியன் நிர்வாகி கூறியதாவது, தொழிலாளர் பயன்பாட்டை திறம்பட நிர்வகித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை காக்னிகண்ட் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது. காக்னிசண்டின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமல்லாமல் மனிதத்தன்மையற்ற செயல் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரு நிறுவனம் 100 தொழிலாளர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ வேண்டுமென்றால், அம்மாநில தொழிலாளர் துறையின் அனுமதி பெற வேண்டும் காக்னிசண்ட் நிறுவனம் சட்டத்திற்கு விரோதமாக தங்களது பணியாளர்களிடம் ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது. அதன்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தெரிவித்துள்ளதாவது, நிறுவனத்திற்கு புதிய புராஜெக்ட்டுகள் வராத காரணத்தினால், வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், புதிய புராஜெக்ட்டுகளை எடுக்க முடியாத நிலையில் நிறுவனம் உள்ளதால், பணியாளர்கள் புதிய வேலையை தேடிக்கொள்ளுமாறும், தாங்களாகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணியாளர்கள் மற்றும் யூனியனின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் பெற காக்னிசண்ட் நிறுவனத்தை தொடர்புகொண்டபோது அவர்கள் இதற்கு விளக்கமளிக்காமல் விலகிக்கொண்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil