குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த குழுவை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும், தேர்தல் முடிந்ததும் அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது குறித்து விவாதிக்க ஒரு குழுவை அமைப்பதாக உறுதியளித்தார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது ஒரு துணைக் கேள்விக்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.
எம்.எஸ்.பி தொடர்பான குழுவை அமைப்பது அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், தேர்தல் முடிந்ததும் அமைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
“பயிர்களை பல வகைப்படுத்தல், இயற்கை விவசாயம், குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றை பயனுள்ள, வெளிப்படையானதாக மாற்ற ஒரு குழுவை பிரதமர் அறிவித்துள்ளார் என்பது மொத்த நாட்டிற்கும் தெரியும். பிரதமரின் அறிவிப்பை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. தேர்தல் நடைபெற உள்ளதால், வழிகாட்டுதலுக்காக தேர்தல் ஆணையத்திற்கு அரசு கடிதம் எழுதியுள்ளது. அதற்கு தேர்தல் ஆணையத்தின் பதில் வந்துவிட்டது. தேர்தல் முடிந்ததும் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது” என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தேர்தல் முடிந்ததும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த குழுவை அமைக்கலாம் என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"