கேரளாவில் பாவமன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை வற்புறுத்தி பாதிரியார்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் விசாரணையை தேசிய மகளிர் ஆணையம் முடித்துள்ளது.
சமீபத்தில் கேரள மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தனது திருமண வாழ்க்கைக்கு முன்பு நடந்த தவறை நினைத்து பாவ மன்னிப்பு வாங்க சென்ற பெண்ணை 5 பாதிரியார்கள் சிலர் வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்மூலத்தின் அடிப்படையில் பாதிரியார்கள் மீது குற்றவழக்குகள் பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாரின் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இவ்விவகாரத்தில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் பாதிக்கப்பட்ட பெண்களிடமும், இவ்விவகாரங்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டது. தற்போது விசாரணையை முடித்த தேசிய மகளிர் ஆணையம் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து அறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், ஆகஸ்ட் 6-ம் தேதி வரை குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார்கள் ஜார்ஜ் மற்றும் சோனி வர்க்கீஸ் ஆகியோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/2-72.jpg)
இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறும் போது, "ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்படி ஒரு பெண்ணால் தன் அந்தரங்க வாழ்க்கை குறித்து பாதிரியாரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும். பாவ மன்னிப்பு பெண்களை மட்டும் பாதிக்காது ஆண்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். எனவே, பாவ மன்னிப்பு கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்