நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2ம் இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3வது இடத்தையும் பிடித்தது.
இதனையடுத்து மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று(செப்.8) இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், 'நாட்டின் வளர்ச்சி விகிதம் 5% அளவுக்கு வீழ்ச்சியடைந்ததுதான் மோடி அரசின் 100 நாள் சாதனை' என்று விமர்சித்தது.
இந்நிலையில், 100 நாட்களை கடந்த பிரதமர் மோடி அரசில் எந்த வளர்ச்சியும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் ஆகிவிட்டது. ஆனால் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஜனநாயகம் தொடர்நது வீழ்த்தப்பட்டது, விமர்சனங்களை தவிர்க்க ஊடகங்கள் மீது கடுமையான அடக்குமுறை நடைபெறுகிறது. பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க சரியான திட்டமிடலும், பயணமும் தேவைப்படும் நிலையில் அது இல்லாத தலைமையே இப்போது உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில் சிபல் இன்று மோடி அரசின் 100 நாள் ஆட்சி குறித்து கூறுகையில், "சாதாரண மனிதனுக்கும் நல்லது செய்ய வேண்டும் என நினைத்து தான் லோக்சபா தேர்தலில் மக்கள் பாஜகவை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக சாதாரண மக்களுக்கு பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இணைய ஊடகங்கள் ஒருதலைபட்சமாகி வருகிறது. பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது.
கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த அரசிடம் எந்த செயல்திட்டமும் இல்லை. அமலாக்கத் துறையால் எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வருமான வரித் துறை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய வணிகர்கள் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள்" என கூறியுள்ளார்.