சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை நடத்துவதற்காக வரும் விமர்சனங்களைத் தவிர்த்து, மோடி அரசை தாக்குவதற்கு காங்கிரஸ் அரசியலமைப்பு உரிமையை எடுத்துக்கொண்டுள்ளது.
2020 டிசம்பரில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலிருந்து காங்கிரசும் பல எதிர்க்கட்சிகளும் விலகி இருந்தன. அந்த நேரத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் தொற்றுநோய் பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த நேரத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படுவது குறித்து கேள்விகள் எழுப்பின.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்துத்துவா சித்தாந்தவாதியான வி.டி. சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கலாமா என்று எதிர்க்கட்சிகள் இப்போது யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை மோடி திறந்து வைப்பது குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைத்திருக்க வேண்டும் என்று வாதிட்டனர். இதில் கலந்து கொள்வதா அல்லது விலகி இருப்பதா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டு நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடக்கப் போகிறது என்று தெரிந்ததும் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை கடுமையாக்கியதுடன் அதே சமயம் அதை நுணுக்கமாகக் கையாள முயற்சி செய்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸின் கூட்டாளியான சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) சாவர்க்கர் மீதான எந்த தாக்குதலையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை கட்சிக்கு தெளிவுபடுத்தியதன் மூலம் காங்கிரஸுக்கு சாவர்க்கர் சிக்கலான விஷயமாக மாறியிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் சரத் பவாரும் கடந்த காலங்களில் சாவர்க்கரை தாக்குவதை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அரசாங்கத்தை விமர்சித்து, காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த வாரம் ட்வீட் செய்தார்: “நம்முடைய நாட்டை நிர்மாணித்த தந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஒரு முழுமையான அவமானம். காந்தி, நேரு, படேல், போஸ் போன்றோர் மொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளனர் டாக்டர் அம்பேத்கர் அப்பட்டமாக மறுக்கப்பட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்ற தலைவர்களுடன் இணைந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் திறக்க வேண்டும் என்றும் பிரதமரால் திறக்கப்படக் கூடாது என்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார். அரசியலமைப்பு உரிமை குறித்த வாதத்தின் பக்கம் சாய்ந்து சர்ச்சையில் இருந்ததால் அன்றைய முக்கியத்துவத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை இந்த பிரச்சினையை தலித் மற்றும் பழங்குடியினருடன் தொடர்புபடுத்தினார். “தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை மோடி அரசு உறுதி செய்தது போல் தெரிகிறது. புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவிற்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
நாடாளுமன்றம், இந்தியக் குடியரசின் உச்ச சட்டமியற்றும் அமைப்பாகவும், குடியரசுத் தலைவர் அதன் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமாகவும் இருப்பதாகக் கார்கே கூறினார். மேலும், “அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் இந்தியாவின் முதல் குடிமகன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு உரிமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும். மோடி அரசு பலமுறை உரிமையை மதிக்கவில்லை. பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்தின் கீழ் இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் அடையாள ரீதியான ஒன்றாக குறைக்கப்பட்டுள்ளது.” என்று கார்கே கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“