கிட்டதட்ட 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக செயலாற்றி வரக்கூடிய சோனியா காந்தி சமீபகாலமாக பல்வேறு உடல்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார். அது மட்டும் இன்றி புதிய தலைவர் வேண்டும் என்ற குரல் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து வந்தாலும் சமீபத்தில் அந்த குரல் சற்று சத்தமாக கேட்க தொடங்கியுள்ளது. ராகுல் காந்தியை தலைவராக தேர்ந்தெடுத்து பொறுப்புகள் அத்தனையையும் அவரிடன் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களே வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக முடிவெடுக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியது.
சோனியா காந்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். குஜராத் மற்றும் இமாச்சல் சட்டசபை தேர்தல் தொடர்பாகவும் சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டதுடன், அனைவரும் எதிர்பார்த்தபடி கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான தேர்தல் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் துணை தலைவராக இருக்கும் ராகுல் காந்தி இந்த தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அகில இந்திய காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 1-ல் தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 11. டிசம்பர் 16-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 19-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.