சாதிகள், சமூகங்கள் மற்றும் நிலப்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட தலைவர்களுக்கு பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்துள்ளது. ஜோர்ஹாட் எம்.பி கவுரவ் கோகோய் மக்களவையில் துணைத் தலைவராகவும், மாவேலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் தலைமைக் கொறடாவாகவும், கீழ் அவையில் 2 கொறடாக்களாக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் கிஷன்கஞ்ச் எம்.பி முகமது ஜாவேத் ஆகியோரை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
கே. சுரேஷ் கேரளாவைச் சேர்ந்த தலித் தலைவர், மாணிக்கம் தாகூர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓ.பி.சி தலைவர், முகமது ஜாவேத் பீகாரைச் சேர்ந்த முஸ்லீம் தலைவர். மறுபுறம், கவுரவ் கோகோய் அஸ்ஸாமைச் சேர்ந்தவர், இவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓ.பி.சி) சமூகத்தைச் சேர்ந்தவர்.
“பல்வேறு இடங்கள், சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கத்தில் பல்வேறு சமூகங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை கட்சி மக்களவைத் தலைமைக் குழுவில் சேர்த்துள்ளது என்பது தெளிவாகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி எம்.பி.யான ராகுல் காந்தி, மக்களவையில் எங்கள் தலைவராக இருக்கும்போது, பரந்த பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக மக்களைச் சேர்த்துள்ளோம். பின்தங்கிய சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறித்து கட்சி பேசுவதை இந்த நியமனங்கள் காட்டுகின்றன” என்று மூத்த காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இந்த நியமனங்களை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியதாகக் கூறினார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவையில் மக்கள் பிரச்னைகளை ஆற்றலுடன் முன்வைத்து வெல்வார்கள் என்று கே.சி. வேணுகோபால் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கவுரவ் கோகாய்
அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாயின் மகன், 41 வயதான கவுரவ் கோகாய், முந்தைய மக்களவையிலும் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், ஜோர்ஹட் தொகுதியில் இருந்து, 1.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், பா.ஜக எம்.பி. தோபன் குமார் கோகாயை தோற்கடித்தார்.
கலியாபோர் மக்களவைத் தொகுதி, அவரது குடும்பத்தின் செல்வாக்கு மிக்க தொகுதியாக இருந்தது. கடந்த காலத்தில் அவர் 2 முறை இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். கடந்த ஆண்டு தொகுதி மறுவரையறை நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், கவுரவ் கோகாய் ஜோர்ஹட் தொகுதிக்கு மாறினார். கவுரவ்வின் தொகுதி மாற்றத்திற்கு பங்களித்த மற்றொரு காரணி, அவரது மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவரான அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில், கலியாபோரில் மேற்கொண்ட பா.ஜ.க-வின் ஆக்ரோஷமான பிரச்சாரம் ஆகும்.
கவுரவ் கோகாய் நியமனம் மணிப்பூர் பிரச்சினையை சபையில் எழுப்பும்போது கட்சிக்கு உத்வேகத்தை அளிக்கும். அவர் கீழ்சபையில் வடகிழக்கு காங்கிரஸின் குரலாகவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே. சுரேஷ்
18-வது மக்களவையின் அரசியலமைப்பிலிருந்து, சுரேஷ் கவனத்தில் இருந்தார். சபையின் மூத்த உறுப்பினராக இருந்தும் தற்காலிக சபாநாயகர் பதவிக்கு கவனிக்கப்படாத சர்ச்சையின் மையத்தில் இருந்தார். பா.ஜ.க எம்.பி பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கூறியது.
62 வயதான சுரேஷ், லோக்சபா சபாநாயகருக்கான இந்தியா கூட்டணியின் வேட்பாளராக இருந்தார். அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒருமித்த கருத்தை எட்டத் தவறியதால், அந்த பதவிக்கான அரிதான தேர்தலை கட்டாயப்படுத்தியது.
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர், எட்டு முறை எம்.பி.யாக உள்ளார், மாவேலிக்கரை மற்றும் அடூர் மக்களவைத் தொகுதிகளை தலா 4 முறை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் 1989-ல் கீழ்சபைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் மாவேலிக்கரைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். சமீபத்திய தேர்தலில், சி.பி.ஐ (எம்)-யின் இளம் வேட்பாளர் சி.ஏ. அருண்-ஐ 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது மாநிலத்திலேயே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் - சி.பி.ஐ (எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கையில் வைத்திருக்கும் மக்களவைத் தொகுதி இது.
மன்மோகன் சிங்கின் இரண்டாவது முறை அமைந்த அரசில், இவர் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2021-ம் ஆண்டு கேரள காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்னணியில் இருந்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் சுரேஷ், தற்போது கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரியக் கமிட்டியில் (சி.டபிள்.யூ) சிறப்பு அழைப்பாளராக உள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியின் கேரளப் பிரிவின் செயல் தலைவராகவும் பணியாற்றுகிறார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் இருந்துள்ளார்.
மாணிக்கம் தாகூர்
தமிழ்நாட்டின் விருதுநகரில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர், 49 வயதான தாகூர், கடந்த மக்களவையிலும் கட்சியின் கொறடாவாக இருந்தார். சமீபத்தில் நடந்த தேர்தலில் தே.மு.தி.க-வின் விஜய பிரபாகரனை 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மாணிக்கம் தாகூர் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ-ல் மாவட்டப் பொதுச் செயலாளராகத் தொடங்கினார், காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்து உயர்ந்தார். ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படும் மாணிக்கம் தாகூர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க-வின் ஹமிர்பூர் எம்.பி அனுராக் தாக்கூர் ஆகியோர் சபையில் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார்.
முகமது ஜாவேத்
61 வயதான ஜாவேத், 4 முறை எம்.எல்.ஏ-வாகவும், 2000 முதல் 2004 வரை பீகார் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார். 2019-ல் கிஷன்கஞ்சில் தனது முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, ஜே.டி (யு) சையத் மஹ்மூத் அஷ்ரப்பை தோற்கடித்தார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், 59,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில், ஜே.டி.(யு) கட்சியின் முஜாஹித் ஆலம்மை தோற்கடித்தார். இவரது தந்தை முகமது உசேன் ஆசாத் பீகாரில் 6 முறை எம்.எல்.ஏ-வாகவும், பலமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
“ஒரு முஸ்லிமுக்கு இவ்வாறான பதவியை வழங்குவது, நாட்டின் சிறுபான்மையினருடன் கட்சி நிற்பதைக் காட்டுகிறது. தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் எம்.பி.க்களை தேர்ந்தெடுத்ததற்காக கிஷன்கஞ்ச் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது இருக்கலாம்” என்று ஒரு தலைவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.