காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் தொழில் முனைவோர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாணவர்களைச் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜூன் 1) வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது கேரளாவில் முஸ்லிம் லீக்குடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், முஸ்லிம் லீக் (IUML) முற்றிலும் மதசார்பற்ற கட்சி. அக்கட்சியில் மதசார்பானது எதுவுமில்லை. அந்த செய்தியாளர் முஸ்லிம் லீக்கைப் படிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் என்றார்.
இந்நிலையில், ராகுலின் இந்த கருத்துக்கு பா.ஜ.க விமர்சனம் செய்து வருகிறது. 'மத அடிப்படையில் இந்தியாவை பிரித்ததற்கு காரணமான கட்சி மதசார்பற்ற கட்சியா?' என விமர்சனம் செய்துள்ளது.
மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரண் ரிஜிஜு கூறுகையில், "ஜின்னாவின் முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சியா? மத அடிப்படையில் இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவில் இன்னும் சிலர் முஸ்லீம் லீக்கை ஆதரிக்கும் நபரை மதச்சார்பற்றவராக கருதுகின்றனர்" என்றார்.
உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில், ராகுலின் பேச்சு "மிகவும் வருத்தமளிக்கிறது". அன்னிய மண்ணில் தேசத்தை இழிவுபடுத்துவதை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
பா.ஜ.கவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறுகையில், "ஜின்னாவின் முஸ்லிம் லீக் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) இரண்டும் வெவ்வேறு கட்சிகள் என்று சுட்டிக்காட்டினார். பா.ஜ.கவின் மாளவியாவின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, நீங்கள் படிக்கத் தெரியாதவரா? உங்களுக்கு கேரள முஸ்லீம் லீக்கிற்கும் ஜின்னா முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? ஜின்னாவின் முஸ்லீம் லீக் உடன் உங்கள் கட்சி முன்னோர்கள் கூட்டணி வைத்தனர்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“