ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் முதல்வர்கள் சந்திப்பு: ராஜினாமாவில் தீவிரம் காட்டும் ராகுல்!

ராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக் கொள்ள சம்மதம் தெரிவித்தாரா என்ற கேள்விக்கு, “நாங்கள் எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறோம்” என்றார் அசோக் கெஹ்லாட். 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்குப் பிறகு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை டெல்லியில் நேற்று சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

அவர்கள் அனைவரும் ராகுலின் முடிவை திரும்ப பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் ராகுல் தனது எண்ணத்தை மாற்றுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட், தேர்தல் இழப்புக்கான பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். ராகுல் ஒரு நேர்மறையான முடிவை எடுப்பார் என முதல்வராகிய தாங்கள் அனைவரும் நம்புவதாக அவர் தெரிவித்தார். ஆனால் தனது முடிவை ஏற்கனவே காங்கிரஸ் ஒர்க்கிங் கமிட்டியிடம் தான் தெரிவித்து விட்டதாக முதல்வர்களுடனான சந்திப்பில் தெரியப்படுத்தியிருக்கிறார் ராகுல். அதோடு மாற்றுத் தலைவருக்கான ஒருமித்த முடிவை எடுக்கும்படியும் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் தோல்விக்கு அந்தந்த மாநில தலைவர்கள் பொறுப்பேற்காதது, ராகுல் காந்தியை மிகுந்த வருத்தமடையச் செய்திருக்கிறதாம். நாம் பொறுப்பேற்று பதவி விலகுவதை அறிவித்தும் கூட, யாரும் தங்கள் மாநில தோல்விக்கு பொறுப்பேற்க முன்வரவில்லை என்பது ராகுலுக்கு மிகுந்த கோபத்தையும், வருத்தத்தையும் வரவழைத்திருக்கிறதாம்.

Rahul Gandhi meeting with congress CM's

Rahul Gandhi

அசோக் கெஹ்லாட் (ராஜஸ்தான்), கமல்நாத் (மத்திய பிரதேசம்), அமரிந்தர் சிங் (பஞ்சாப்), பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்), நாராயணசாமி (புதுச்சேரி) ஆகிய 5 முதல்வர்களும் நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். இவர்கள் 5 பேரிடமும் ‘ஃபேஸ் டூ ஃபேஸ்’ உரையாடலைக் கொண்டிருந்தார் ராகுல். கெஹ்லாட்டும், கமல் நாத்தும் கட்சியின் வெற்றியை கவனத்தில் கொள்வதற்கு பதில், தங்களது மகன்களின் வெற்றி மேல் அதிக விருப்பம் காட்டியதற்காக முன்னர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் ராஜினாமா குறித்து ஆலோசித்ததாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். அவர் பேசுகையில், ”நாங்கள் அவரிடம் கோரிக்கை வைத்தோம். அவர் நாங்கள் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டார். இந்த நேரத்தில் அவர் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நாங்கள் அவரிடம் கேட்டுக் கொண்டோம். அவர் எங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டார். அவர் என்ன தீர்மானிக்கிறார் என்று பார்ப்போம். ஆனால் அவர்  மனதில் இருப்பதை எங்களிடம் கூறவில்லை” என்றார்.

“காங்கிரஸ் கட்சியினரின் உணர்வுகள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள், நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை ராகுலிடம் வெளிப்படுத்தினோம். இது ஒரு வெளிப்படையான விவாதம். கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் பொதுவான விஷயம் என்று நாங்கள் அவரிடம் சொன்னோம். அவர் நாங்கள் கூறுவதை பொறுமையாகக் கேட்டார். நாங்கள் இதயத்திலிருந்து பேசினோம். அவர் எங்கள் பேச்சைக் கேட்பார், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் ” என்றார் அசோக் கெஹ்லாட்.

ராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக் கொள்ள சம்மதம் தெரிவித்தாரா என்ற கேள்விக்கு, “நாங்கள் எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறோம்” என்றார் அசோக் கெஹ்லாட்.

மேலும் தொடர்ந்த அவர், “ராகுல் ’அடிப்படை பிரச்னைகள்’, கொள்கைகள்,  மற்றும் திட்டங்களின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆனால் தேசபக்தி குறித்து பேசி பாஜக நாட்டை ’தவறாக வழிநடத்தியது’. ஆயுதப்படைகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மதத்தின் பெயரில் மக்களை தவறாக வழிநடத்தியது. பிரதமர் மோடி, வளர்ச்சி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு பற்றி பேசவில்லை,” என்றார் கெஹ்லாட்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close