காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் அண்மையில் கலந்து கொண்டார். மகாராஷ்டிராவில் யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுலுடன் மேதா பட்கர் பங்கேற்றார். ராகுல் மேதா பட்கருடன் இணைந்து நடைபயணம் செய்ததை பா.ஜ.க கடுமையாக விமர்சித்து வருகிறது. மேதா பட்கரின் தோளில் ராகுல் கைபோட்டு நடைபயணம் செய்யும் காட்சிகள் வெளியிடப்பட்டது. மேதா, குஜராத்திகளுக்கு எதிரானவர் என விமர்சனம் செய்கிறது. இந்த விவகாரம் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடி, பா.ஜ.க-வின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். பிரதமரின் கருத்துகள் பா.ஜ.க-வின் 'திசை திருப்பும் தந்திரத்தின்' ஒரு பகுதி என்று அக்கட்சி கூறியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராஜ்கோட் மாவட்டம் தோராஜி நகரில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ராகுல் மட்டும் பட்கரை மோடி கடுமையாக விமர்சித்தார். குஜராத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை பா.ஜ.க மற்றும் மோடியின் கனவு திட்டம். இந்த திட்டத்தால் பல கிராமங்கள் பாதிக்கப்படும் என மேதா பட்கர் தனது அமைப்பின் மூலம் போராட்டம் நடத்தினார். இருப்பினும் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மோடியின் கனவு திட்டம்
பா.ஜ.கவைப் பொறுத்தவரை, பட்கர் நர்மதாவின் சர்தார் சரோவர் அணைக்கு எதிரான போராட்டத்தின் முகம் மட்டுமல்ல, பிரதமர், குஜராத் முதல்வராக மோடியின் கனவு திட்டத்தை எதிர்த்தவர்.
நேற்று பிரச்சாரத்தில் பேசிய மோடி, "சர்தார் சரோவர் அணைக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்திய சகோதரி ஒருவருடன் காங்கிரஸ் தலைவர் நடைபயணம் செய்கிறார். வாக்கு சேகரிக்க காங்கிரஸ் வரும் போது இது பற்றி கேளுங்கள்" என்று கூறினார். ராகுல் குஜராத்தில் இன்று 2 இடங்களில் பேரணி நடத்த உள்ள நிலையில் மோடி இவ்வாறு கூறினார்.
யாத்திரையில் ராகுலுடன் பட்கர் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து முதல்வர் பூபேந்திர படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸும் ராகுல் காந்தியும் குஜராத் மற்றும் குஜராத்திகள் மீது தங்கள் விரோதத்தை மீண்டும் மீண்டும் காட்டியுள்ளனர். மேதா பட்கருக்கு தனது யாத்திரையில் முக்கிய இடம் அளித்ததன் மூலம், பல காலங்களாக குஜராத்திகளுக்கு தண்ணீர் மறுத்தவர்களுடன் தான் நிற்பதை ராகுல் காந்தி காட்டுகிறார். இதை குஜராத் பொறுத்துக் கொள்ளாது" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், பூபேந்திர படேல் ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்தார். ஆம் ஆத்மியின் மேதா பட்கருடனான தொடர்பு குறித்து விமர்சித்தார், மற்றும் ஆர்வலரை "நகர்ப்புற நக்சல்" என்று விமர்சித்தனர்.
பா.ஜ.க அரசால் மக்கள் சோர்வடைந்து விட்டனர்
ஆனால், பிரதமரின் கருத்து தேர்தல் முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் கூறினார். "பட்கரைப் பற்றி எங்களிடம் கேட்டால், அவர்களிடம் (பா.ஜ.க) கேட்க ஆயிரம் கேள்விகள் உள்ளன. யாத்திரையில் யார் வேண்டுமானாலும் சேரலாம். இதை நீங்கள் பிரச்சனை ஆக்குகிறீர்கள். நீங்கள் தவறு செய்து மன்னிப்பு கேட்டால், மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது காங்கிரஸின் கூற்று அல்ல. ஆட்சியைப் பற்றிய மக்களின் அனுபவம். 27 வருடங்களாக இதையே நீங்கள் கூறி வருகிறீர்கள். பா.ஜ.க அரசால் மக்கள் சோர்வடைந்து விட்டனர். இந்த விவகாரம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்றார்.
அணையை கட்டியது யார்? என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைக் குறிப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) குஜராத் பொறுப்பாளர் ரகுஷர்மா கேள்வி எழுப்பினார்.
இந்த விஷயத்தில் மோடியின் விமர்சனம் தேர்தல் பிரச்சினை அல்ல என்றும் அவர் கூறினார். “அவர் (பட்கர்) போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவரை குஜராத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தது (முன்னாள் முதல்வர்) சிமன்பாய் படேலும் அவரது மனைவியும் (ஊர்மிளா) தான். அப்போது பா.ஜ.க எங்கே இருந்தது? ராகுல் தனது யாத்திரையைத் தொடங்குவதற்கு முன் அனைத்து அரசு சாரா நிறுவனங்களுடன் பேசினார். அமைப்புகளுடன் பேசினார். மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும் யாத்திரையில் இணைந்தார். அதைப்பற்றி மோடி ஏன் பேசவில்லை?" என்றார்.
மருத்துவ வசதி இல்லை - 3 லட்சம் பேர் பலி
தொடர்ந்து ஷர்மா கூறுகையில், "முக்கிய பிரச்சினையிலிருந்து திசைதிருப்புவது அவருடைய (மோடியின்) வழக்கம். மிகுந்த கவலை அளிக்க கூடிய சூழல் நிலவுகிறது. முறையான மருத்துவ வசதி கிடைக்காமல் கோவிட் பாதிப்பால் இறந்த மூன்று லட்சம் பேரைப் பற்றி ஏன் அவர் பேசவில்லை? அவர் ஏன் போதைப்பொருள் கடத்தல் பற்றி பேசவில்லை? குஜராத் வறட்சி மாநிலம், ஆனால் சட்டவிரோத மதுபானம் ஹோம் டெலிவரி மூலம் கிடைக்கிறது. இவைதான் பேச வேண்டிய பிரச்சினைகள். அவர் (மோடி) நாட்டின் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம் பற்றி பேச வேண்டும்" என்று கூறினார்.
ராகுல் பட்கருடன் நடந்தது பா.ஜ.கவுக்கு ஏன் தேர்தல் பிரச்சினையாக உள்ளது என்று கேட்டதற்கு ஷர்மா, "ஒவ்வொரு முறையும் அவர்கள் விலகுகிறார்கள். அவர்கள் பிரச்சினைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகள் குறித்த திட்டம் எங்கே? ராஜஸ்தான், சத்தீஸ்கர் அரசுகள் செய்தது போல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி அவர் பேசுகிறாரா?" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.