சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரசின் முன்னாள் அமைச்சர், டி.கே.சிவகுமாரிடம், அமலாக்க துறையினர் விசாரணை நடத்திய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரியும், அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும் கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.
இந்த சூழலில், டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அதிகாரிகள் மீண்டும் சம்மன் வழங்கினார்கள். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
குமாரசாமி கண்டனம் : சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி மற்றும் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.