காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கவும், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அக்கட்சியை பாஜகவுக்கு எதிராக வலிமை கொண்ட எதிர்க்கட்சியாக மாற்றவும் பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுவதற்கும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு தயாராவதற்கும் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த செயல் திட்ட முன்வரைவு குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் மற்றும் மறுமலர்ச்சி குறித்து விவாதிக்க செயற்குழு உறுப்பினர்கள் குழுக்களாக கூடி விவாதிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசாந்த் கிஷோர் இந்த மாத தொடக்கத்தில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்தபோது திட்டம் ஒன்றை முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. ஜூலை 13 ஆம் தேதி ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி வாத்ராவை அவர் சந்தித்தார். முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், தேர்தல் வியூகம், ஒருங்கிணைப்பு, மேலாண்மை மற்றும் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கிஷோர் தீவிரமாக ஈடுபட விரும்புவதாகக் கூறினார். மற்றொரு தலைவர் “இது காங்கிரஸ் கட்சியை எவ்வாறு புதுப்பிப்பது என்பது குறித்த பட்டியல். கிஷோர் முறையாக கட்சிக்கு வர விரும்புகிறார். இது பற்றிய விவாதங்கள் மற்றும் அதை முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. பிரியங்கா காந்தி வத்ரா இதற்கு உந்து சக்தியாக செயல்படுகிறார்" என்றார்.
கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்க ஒரு அதிகாரமளிக்கப்பட்ட குழுவை அமைக்கவும், மாநில மற்றும் மாவட்ட குழுக்களை வலுவாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவும் கிஷோர் பரிந்துரைத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் பல முறை சந்தித்து பேசியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் ஏகே அந்தோணி ஆகியோர் கூட்டங்களை ஒருங்கிணைப்பதாக கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோரின் திட்ட முன்வரைவு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கு விரிவாக பகிரப்படவில்லை ,சில முக்கியமான அம்சங்கள் மட்டும் வழங்கப்பட்டன என கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறினார்.
முதல் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ப.சிதம்பரம், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் AICC பொதுச் செயலாளர் பவன்குமார் பன்சால் ஆகியோர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது கூட்டத்தில் ராஜ்யசபா காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, AICC பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத், கமல்நாத், ரகுவீர் மீனா மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்றனர். மூன்றாவது கூட்டத்தில் பிரியங்கா, திக்விஜயா சிங், தாரிக் அன்வர் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், "விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் திட்ட முன்வரைவு குறித்து இப்போது தீவிரமாக சிந்திக்கப்படவில்லை. இப்போது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்து என்பதே சவால். 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியில் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகள் நடப்பது இயல்பு' என கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.