மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
17 மாநிலங்களில் ஒரு மாநிலங்களவை எம்.பி. கூட அக்கட்சிக்கு தற்போது இல்லை.
இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாநிலங்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
அதையடுத்து, மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையவுள்ளது.
17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மார்ச் மாத இறுதியில் மாநிலங்களவையில் காங்கிரஸுக்கு 33 உறுப்பினர்கள் இருந்தனர்.
ஏற்கனவே 4 உறுப்பினர்கள் பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. மேலும் 9 பேர் பதவிக் காலம் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதம் முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து, மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எண்ணிக்கை 30-க்கும் கீழ் சென்றுவிடக்கூடும். இதுவரை இதுபோன்ற நிலையை காங்கிரஸ் கண்டதில்லை.
தமிழகத்தில் திமுக காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்தை காங்கிரஸ் அளிக்க வாய்ப்புள்ளது.
அப்படி அளித்தால் காங்கிரஸ் பலம் மாநிலங்களவையில் 31ஆக இருக்கும். எனினும், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா, இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, டெல்லி மற்றும் கோவா ஆகியவற்றில் ஒரு இடம் கூட காங்கிரஸுக்கு இல்லை.
வரலாற்றில் முதல் முறையாக வடகிழக்கில் 8 மாநிலங்களில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கூட அக்கட்சிக்கு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக இருந்தார்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கு பிறகு, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் காங்கிரஸுக்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பார்கள். ராஜஸ்தானில் இருந்து 5 உறுப்பினர்கள், சத்தீஸ்கரில் இருந்து 4 உறுப்பினர்கள், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 3 உறுப்பினர்கள், மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 2 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பிகார், கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு உறுப்பினர் காங்கிரஸுக்கு இருப்பார்கள். மக்களவையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
இதையும் படியுங்கள்: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த திமுக அலுவலக திறப்பு நிகழ்ச்சி
மக்களவையிலும் குறைந்துவரும் எண்ணிக்கை
ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்கு மக்களவை உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லை.
மக்களவையில் மொத்தம் உள்ள 53 உறுப்பினர்களில் 28 பேர் தென்னிந்திய மாநிலங்களில் உள்ளனர்.
கேரளத்திலிருந்து 15 பேர், தமிழகத்தில் இருந்து 8 பேர், தெலங்கானாவில் இருந்து 3 பேர், கர்நாடகா, புதுச்சேரியிலிருந்து தலா ஒரு உறுப்பினர் உள்ளனர். வட இந்தியாவில், பஞ்சாபில் இருந்து 8 உறுப்பினர்கள் உள்ளனர்.
அஸ்ஸாமிலிருந்து 3 எம்.பி.க்களும், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து தலா 2 எம்.பி.க்களும் உள்ளனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பிகார், மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், ஒடிசா, கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒரே ஒரு மக்களவை எம்.பி. மட்டுமே காங்கிரஸ் வசம் இருக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil