scorecardresearch

தலைமையை டார்கெட் செய்கிறார்களா ஜி 23 தலைவர்கள்…கூட்டத்தில் நடந்தது என்ன?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தி இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு கூறுகையில், “பஞ்சாப் மாநிலத்தில் கட்சி தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாமை, உட்கட்சி பூசல் ஆகியவை கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. கட்சி கட்டமைப்பு சரியாக இல்லாததால், அதன் தாக்கம் மற்ற மாநிலங்களில் விலை கொடுக்க நேர்ந்தது

ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த அடுத்த நாளே, ராகுல் காந்தியின் தலைமை கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் கிடைத்துள்ளன. இந்தாண்டு இறுதியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியானது மீண்டும் உட்கட்சி மோதலை சந்திக்க நேரிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்ய கட்சி எந்த அவசரமும் காட்டவில்லை என்றாலும், 2020ல் கட்சியில் பெரும் மாற்றங்களைக் கோரி கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய G23குழுவின் சில தலைவர்கள், மூத்த தலைவரும் CWC உறுப்பினருமான குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பில் தலைவர்களிடையே போராட வேண்டிய மனநிலை இருந்தது. ராஜ்யசபாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, கட்சியின் எம்.பி.க்கள் கபில் சிபல், மணீஷ் திவாரி, அகிலேஷ் பிரசாத் சிங், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சில தலைவர்கள் ஆன்லைன் வாயிலாக கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் தலைமையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சில தலைவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். சோனியா நடத்தவுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டுமா என்பது குறித்தும் கூட விவாதம் நடந்துள்ளது. ஏனெனில், பல உறுப்பினர்கள் காந்திகளைப் புகழ்வதில் தங்கள் ஆற்றலை செலவழிப்பார்கள் என சிலர் கூறியுள்ளனர்.

கட்சி “இருப்புக்கே பிரச்னை” என்கிற நேருக்கடியை நோக்கி செல்வதாகவும், தகுந்த நடவடிக்கைகளை எடுக்கப்படாவிட்டால் கட்சி நெருக்கடியின் ஆழத்திற்கு சென்றுவிடும் என தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இது முறையான சந்திப்பு அல்ல. டெல்லியில் இருக்கும் சிலரை சந்தித்தோம். விரைவில் முறைப்படி சந்திப்போம் என தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லவில்லையென்றால், அது மூழ்கிவிடும். நாலாபுறமும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் இந்திய அரசியலின் கொந்தளிப்பான கடலில், நாங்கள் படகில் அமர்ந்திருக்கிறோம். ஒருவேளை படகு தண்ணீரில் மூழ்கலாம் அல்லது படகில் பயணம் செய்யும் சிலர் அதை மீண்டும் கரைக்கு கொண்டு செல்ல முயற்சிப்போம் என்றார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் கவலையளிக்கிறது என்று தலைவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் ஓரங்கட்டப்படுவதற்கு வழிவகுக்கும் பிற மாற்று வழிகள் உள்ளன. நெருக்கடி உண்மையானது. கண்களை மூடிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது என்றார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் நாத் கூறுகையில், “இது கட்சியை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம். பஞ்சாப் பிரிவின் உள்கட்சி பூசல், ஒற்றுமை இல்லாமை ஆகியவை, மற்ற மாநிலங்களில் பாஜகவின் மேலாதிக்க அமைப்பு பலத்தை தோற்கடிக்க முடியாமல் செல்ல வழிவகுத்தது. பஞ்சாபில், காங்கிரஸ் மாற்றத்திற்கான அலைக்கு எதிராக இருப்பதாகவும், உள்கட்சி பூசல் அதன் ஒரு பகுதி மட்டுமே என்றார்.

உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது.

இதுகுறித்து நாத் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா ஒரு தீப்பொறியை உருவாக்கினார். வெற்றியடையக்கூடிய தேர்தலாக இல்லாவிட்டாலும், அவரது பிரச்சாரம்தான் அதை ஒரு போட்டியிடக்கூடிய தேர்தலாக மாற்றியது. எங்கள் பிரச்சாரம் தாமதமாக தொடங்கியது உண்மைதான். “அரசியலில் நிலையானது எதுவும் இல்லை. எனவே, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கூட விஷயங்கள் கடுமையாக மாறக்கூடும்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Congress g23 leaders meet may target party leadership