காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தனது 60 வயதில் அவருடைய நீண்ட நாள் தோழியை திருமணம் செய்துகொண்டார். ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இவர்கள் திருமணத்திற்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக். இவர் மகாராஷ்டிரா அரசியல்வாதி பால்கிருஷ்ணாவின் மகன். காங்கிரஸ் கட்சியின் தலித் தலைவர்களில் முக்கியமானவர்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் முகுல் வாஸ்னிக் பெயரும் அடிபட்டது.
தற்போது 60 வயதாகும் முகுல் வாஸ்னிக் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த நிலையில், இன்று அவர் தனது நீண்ட நாள் தோழியான ரவீனா குராணாவை ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லாட், மூத்த காங்கிரஸ் தலைவர் அஹமது பட்டேல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
முகுல் வாஸ்னிக் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லாட் தனது டுவிட்டர் பக்கத்தில், “முகுல் வாஸ்னிக் - ரவீனா குரானா இருவரும் இந்த புதிய பயணத்தை ஒரு தம்பதியாக ஒன்றாக இணைத்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நேரம் என்பதை நிரூபிக்கட்டும். ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.-யும் முன்னாள் அமைச்சருமான மனிஷ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் முகுல் வாஸ்னிக் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “புதிதாக திருமணமானவர்களை வாழ்த்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் 1984 ஆம் ஆண்டில் முகுல் வாஸ்னிக்கையும் 1985 ஆம் ஆண்டில் ரவீனா குராணாவையும் மாஸ்கோவிற்கு உலக இளைஞர் மற்றும் மாணவர்களின் விழாவிற்கு சென்றபோது சந்தித்தேன்.
அவர்கள் இருவருக்கும் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாராக...” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தனது 60 வயதில் தன்னுடைய நீண்ட நாள் தோழியை திருமணம் செய்திருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"