கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் அரசு தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ள 5 உத்தரவாதங்களையும் நடப்பு நிதியாண்டிலேயே நிறைவேற்றுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, விதான சவுதாவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா, அரசு அனைத்து உத்தரவாதங்களையும் படிப்படியாக நிறைவேற்றும் என்றார்.
அப்போது, க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ. 2,000 கிடைக்கும், இது ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றார்.
இது குறித்து மேலும் அவர், “ஜூன் 15 மற்றும் ஜூலை 15க்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன் பணிகள் ஆகஸ்ட் 15 முதல் தொடங்கப்படும்.
அவர்களுக்கு ரூ 2,000 விடுவிக்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் அதன் தலைவர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். முதியோர் ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர்” என்றார்.
தொடர்ந்து, அன்ன பாக்யா திட்டம் குறித்து பேசிய சித்தராமையா, ஜூலை 1 முதல் 10 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும், கர்நாடகா முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அரசு அறிவித்துள்ளது. மாணவிகள் உட்பட அனைத்துப் பெண்களும் ஜூன் 11 முதல் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தத் திட்டம் ஏசி பஸ்கள், ஏசி ஸ்லீப்பர் பஸ்கள் அல்லது சொகுசு பஸ்களுக்கு இலவச பயணம் பொருந்தாது. கே.எஸ்.ஆர்.டி.சி.யில் (கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்) 50 சதவீத இருக்கைகள் ஆண்களுக்கு ஒதுக்கப்படும்.
பிஎம்டிசி (பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம்) பேருந்துகளில் முன்பதிவு இல்லை. இலவச பேருந்து பயணம் திருநங்கைகளுக்கும் பொருந்தும்” என்றார்.
94 சதவீத அரசுப் பேருந்துகளில் இந்த இலவசப் பயணம் மேற்கொள்ளப்படும் என்றும், தற்போது அனைத்துப் பெண்களுக்கும் இலவசம் என்றாலும், சில நாட்களுக்குப் பிறகு கர்நாடகாவைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இதற்கிடையில், யுவ நிதி திட்டத்தின் கீழ், சித்தராமையா கூறுகையில், “படிப்பு முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு வேலை கிடைக்காதவர்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பலன்களைப் பெறலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த நாளிலிருந்து 24 மாதங்களுக்கு தொழில்முறைப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 (பட்டதாரி மாணவர்கள்) வழங்கப்படும். டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். இத்திட்டம் பாலினம், சாதி, மதம் மற்றும் மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும். திருநங்கைகளும் சேர்க்கப்படுவர்” என்றார்.
மேலும், 'ஆண்டுக்கு சராசரியாக 200 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதுவரை நிலுவைத் தொகையை நுகர்வோர் ஏற்க வேண்டும். எந்த குழப்பத்தையும் தவிர்க்க 200 யூனிட்டுகளுக்கு மேல் 10 சதவீத இடையகமும் பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் குத்தகைதாரர்களுக்கும் பொருந்தும்” என்றார்.
தொடர்ந்து, திட்டங்களுக்கான செலவை அரசு எப்படி ஏற்கும் என்ற கேள்விக்கு, அது பட்ஜெட்டின் போது மட்டுமே பகிரப்படும் என்று சிவகுமார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.