புயலைக் கிளப்பும் வகையில் பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, கர்நாடகாவில் உள்ள கட்சித் தலைவர்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி புதன்கிழமை புதுதில்லியில் கட்சி மேலிடத் தலைவர்களை சந்திக்க உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுப்படி, அன்றைய தினம் இரண்டு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. “முதல் கூட்டத்தில் வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கும் அதே வேளையில், இரண்டாவது கூட்டம் மாநில அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் போன்ற கட்சித் தலைவர்களுக்கு இடையே நடைபெறும்,” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் சலீம் அகமது கூறினார்.
இதையும் படியுங்கள்: 2024 தேர்தல் வரை காத்திருக்கும் பொது சிவில் சட்டம்; அரசியல் களத்தில் விவாதத்தை தொடர திட்டம்
ஜூலை 18-ம் தேதி பெங்களூருவில் 26 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) கூடியபோது இந்தக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறைவு காரணமாக அன்று, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது, என்று சலீம் அகமது கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தை கருத்தில் கொண்டு டெல்லியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் பல எம்.எல்.ஏ.க்கள் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி பற்றாக்குறை குறித்து புகார்களை எழுப்பினர், மேலும், சில அமைச்சர்களை எம்.எல்.ஏ.க்களால் கூட அணுக முடியவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். கூட்டத்திற்கு முன்னதாக, எம்.எல்.ஏ பி.ஆர்.பாட்டீல் எழுதி, பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் சித்தராமையா தலைமையிலான மாநில அரசாங்கத்தை சங்கடப்படுத்தியது.
அமைச்சரவையில் இடம்கேட்டு எம்.எல்.சி பி.கே ஹரிபிரசாத் போன்ற சில மூத்த தலைவர்களின் கோரிக்கைகளைத் தவிர, இந்த விவகாரங்களும் டெல்லியில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதாரங்களின்படி, அமைச்சரவையில் ஹரிபிரசாத்தின் சேர்க்கை விரைவில் நடக்காது என்றாலும், அவர் மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மாநில காங்கிரஸ் கமிட்டியில் தற்போது ஐந்து செயல் தலைவர்கள் உள்ளனர்.
அரசாங்கத்தின் 5 தேர்தல் உத்தரவாதங்களை அமல்படுத்தியதால் மாநிலம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை கட்சி உயர் தலைமை கவனத்தில் கொள்ளும் என்று கர்நாடக தலைமை எதிர்பார்க்கிறது. புதன்கிழமை நடைபெறும் கூட்டங்களில் 40 கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil