சச்சின் பைலட் குறித்து கெலாட் தாக்கு.. காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி: ‘சில வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கக் கூடாது’ | Indian Express Tamil

சச்சின் பைலட் பற்றி கெலாட் உதிர்த்த வார்த்தைகள்: காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி

கட்சிக்கு கெலாட் மற்றும் பைலட் இருதலைவர்களும் தேவை, ஆனால் கட்சியின் நலனுக்காக கடினமான முடிவுகளை எடுப்பதில் கட்சி தயங்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

சச்சின் பைலட் பற்றி கெலாட் உதிர்த்த வார்த்தைகள்: காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் (இடது), காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் அம்மாநில இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல நிகழ்வுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கெலாட் சச்சின் பைலட் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த தலைவர் இளம் தலைவருக்கு எதிராக “சில வார்த்தைகளை” பயன்படுத்தி இருக்க கூடாது என காங்கிரஸ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தது.

கட்சிக்கு கெலாட் மற்றும் பைலட் இருவரும் தேவை, ஆனால் காங்கிரஸின் நலனுக்காக கடினமான முடிவுகளை எடுப்பதில் இருந்து கட்சி தயாங்காது என்றும் காங்கிரஸ் தெளிவுபடுத்தியது.

ராஜஸ்தான் விவகாரத்தை கட்சி தலைமை கவனித்து வருகிறது. பாரத் ஜோடோ யாத்திரையின் ராஜஸ்தான் பகுதிக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

டிசம்பரில் ராஜஸ்தானில் யாத்திரை – விமர்சனம்

டிசம்பர் முதல் வாரத்தில் யாத்திரை ராஜஸ்தானுக்குள் நுழையும். கெலாட், பைலட் இடையேயான கருத்து வேறுபாடுகள் யாத்திரையை எவ்விதத்திலும் பாதிக்க கூடாது என்பதில் கட்சி உறுதியாக உள்ளது. இது குறித்து இரு தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேச யாத்திரையிலும் இது உறுதி செய்யப்பட்டது என காங்கிரஸ் தெரிவித்தது.

பைலட்டுக்கு எதிராக கெலாட் கடுமையாக விமர்சனம் செய்தார். பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்த “துரோகி (கதர்)” என்று பைலட்டை விமர்சனம் செய்தார். இது தலைமைக்கு அதிருப்தி, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை ராஜஸ்தான் பகுதிக்குள் நுழையும் சில நாட்களுக்கு முன் இந்த விமர்சனம் தெரிவித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யாத்திரை சுமூகமாக நடைபெற வேண்டும் என கட்சி கவனமாக உள்ளது.

தொடங்கத்திலேயே எச்சரிக்கை

நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மூத்த தலைவர், தகவல் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “கெலாட் சில வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்க கூடாது. கெலாட் மற்றும் பைலட் இருவரையும் கட்சி மதிக்கிறது. இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால்
முதல்வர் பயன்படுத்திய சில வார்த்தைகள் எதிர்பாராதவை. முதல்வர் சில வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கக் கூடாது” என்று தெளிவுபடுத்தினார்.

கெலாட்டின் தாக்குதலுக்கு காங்கிரஸ் ஆரம்பத்திலேயே எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில தலைமை மாற்றத்திற்கான சாத்தியம் குறித்து கேட்டபோது ரமேஷ் கூறுகையில், “கெலாட், மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். பைலட் பிரபலமான இளம் மற்றும் ஆற்றல் மிக்க தலைவர். கட்சிக்கு இருவருமே தேவை. சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அதற்கு ராஜஸ்தானுக்குள் தீர்வு காணப்படும். காங்கிரஸ் தலைமை இது குறித்து யோசித்து வருகிறது. கட்சியின் நலனை மனதில் வைத்து எதுவும் செய்யப்படும்” என்றார்.

இரு தலைவர்களும் தேவை

மேலும், “தனிநபர்கள் முக்கியமில்லை. மக்கள் வருவார்கள் போவார்கள். . மூத்த தலைவர், அனுபவம் வாய்ந்த தலைவர், இளம் தலைவர். அதெல்லாம் முக்கியமில்லை. அமைப்பு தான் மேலானது. கட்சியை பலப்படுத்தும் விதத்தில் பிரச்சினை தீர்க்கப்படும். அது குறித்தான காலத்தை என்னால் சொல்ல முடியாது. காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டால்,
அவை எடுக்கப்படும். உடன்பாடு எட்டப்பட்டால், அது நிறைவேற்றப்படும். ஒருபுறம் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர், அவர் மாநில, தேசிய அளவில் மற்றும் அமைப்பில் பல பதவிகளை வகித்துள்ளார். மறுபுறம் பிரபலமான இளம், ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பான தலைவர். எங்களுக்கு இரண்டும் தேவை” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Congress high command upset with ashok gehlot over attack on sachin pilot