எதிர்க்கட்சிகள் மாநில அரசுகளை சீர்குலைப்பதாகவும், ஊழல் செய்வதாகவும், குடும்பத்தின் நலன்களை அனைவரின் மீதும் வைப்பதாகவும், மற்றவர்கள் மத்தியில் பேச்சு சுதந்திரத்தை மதிக்கவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் பேசிக்கொண்டிருக்கையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவர் பேசியதாவது, காங்கிரஸ் குடும்ப அரசியலை தவிர வேறு எதைப்பற்றியும் சந்திப்பது கிடையாது. குடும்ப அரசியலே நமது ஜனநாயகத்திற்கு எதிரான மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆகும். ஒரே குடும்பம் ஒரு கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதால் அரசியல் திறமை பாதிக்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் வளர்ச்சியை அனுமதிக்கவில்லை. இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும்போது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அவர்கள் தேசத்தை எதிர்க்கிறார்கள். தேசம் என்ற கருத்து அரசியலமைப்புக்கு முரணானது என்றால், உங்கள் கட்சி ஏன் இந்திய தேசிய காங்கிரஸ் என்று அழைக்கப்படுகிறது? அதை காங்கிரஸ் கூட்டமைப்பு என்று மாற்றுங்கள்” என்றார்.
தொடர்ந்து, காங்கிரஸ் இல்லையென்றால், நாட்டுக்கு என்ன நடந்திருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினர். அவர் கூறுகையில், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தக் கட்சி கலைக்கப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி கூட விரும்பியதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் இல்லாதிருந்தால், ஜனநாயகத்தில் வாரிசு கலாச்சாரம் இருந்திருக்காது. நாடு பல தசாப்தங்களாக ஊழலை சந்தித்திருக்காது, சாதிவெறியின் தீமைகள் இல்லாமல் இருக்கும், சீக்கிய இனப்படுகொலை நடந்திருக்காது, காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேற மாட்டார்கள். மகள்கள் வீட்டு அடுப்பில் இருந்திருக்க வேண்டாம். வீட்டுச் சாலை, மின்சாரம், தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளுக்காக மக்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியாக இருந்திருக்காது என்றார்.
பிரதமரின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் அவையை விட்டு வெளியேறினர். இருப்பினும் மோடி நிறுத்தவதாக இல்லை. அவர் பேசுகையில், “காங்கிரஸார் மற்றவர்களுக்கு சொற்பொழிவுகளை வழங்கி பழகிவிட்டனர். அவர்களால் மற்றவர்கள் சொல்வதை கேட்க கடினமாக இருக்கும். ஜனநாயகத்தில் மற்றவர்களை கேட்க வைக்க முடியாது, மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதும் அவசியமாகும்.
இந்தியாவின் அடித்தளத்துக்கு காங்கிரஸ் அடிக்கல் நாட்டியது. பா.ஜ.க வெறுமனே கொடியேற்றுகிறது என்று நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது. இதுபோன்றதொரு ஜோக் இதற்கு முன்பு இந்த அவையில் பேசப்பட்டத்தில்லை. சில மக்கள் இந்தியா 1947-ம் ஆண்டுதான் பிறந்ததாக கருதுகின்றனர். இந்த சிந்தனையின் காரணமாகத்தான் பிரச்னைகள் எழுகின்றன. இந்த மனநிலையின் காரணமாக கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கப்பட்டவர்கள் உருவாக்கிய கொள்கைகளிலும் எதிரொலித்துள்ளது.
காங்கிரஸ் அர்பன் நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் சிந்தனை செயல்முறையானது, நக்சல்களின் நோக்கமாக மாறியுள்ளது.
சில தலைவர்கள் “தங்கள் அரசியல் சுயநலத்திற்காக விளையாடுவதாக” குற்றம் சாட்டிய மோடி, தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ஆனால், அவர்களுக்கு மக்கள் செவிசாய்க்கவில்லை. தடுப்பூசிகளுக்காக வரிசையில் காத்திருந்தனர். கொரோனா பிரச்சனை குறித்து முதலமைச்சர்களுடன் இதுவரை 23 முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட்டது. யாருடைய பங்களிப்பையும் குறைத்து மதிப்பிடவில்லை, அதை நாட்டின் பலமாக தான் கருதுகிறோம்.
கோவிட்-19 தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, அரசாங்கம் விரிவான விளக்கத்தை அளிக்கவிருந்தபோது, சில அரசியல் கட்சிகளை அதில் கலந்துகொள்ளாமல் இருக்கச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. யார் உங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. நாடு முன்னோக்கி நகர்கிறது, ஆனால் நீங்கள் சிக்கிக்கொண்டீர்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்களின் முயற்சியால் வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களால், இந்தியா முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது
சிறுகுறு தொழில்கள் ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. அதேபோல விவசாயத்துறையும் அதிக வேலைவாய்ப்புகளைக் கொடுக்கிறது. அவர்களுக்கு எந்த பின்னடையும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்தோம். விவசாயிகள் அதிக அளவிலான குறைந்தபட்ச விலையைப் பெற்றார்கள்.அவர்களுடைய பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற்றனர்
மோடி தனது உரையின் முடிவில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கோவாவை விடுவிக்க இந்திய ராணுவத்தை அனுப்ப மறுத்துவிட்டார், இதன் விளைவாக சுதந்திரத்திற்காகப் போராடிய பல கோயர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸின் இந்த அணுகுமுறையை கோவாவால் மறக்க முடியாது. நேரு கோவாவிற்கு ராணுவத்தை அனுப்புவதற்குப் பதிலாக தனது சர்வதேச பெயரை பற்றி அதிக அக்கறை கொண்டிருந்தார்.
நேருவை விமர்சித்ததற்காக மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கும், வி டி சாவர்க்கர் எழுதிய கவிதைகளின் அடிப்படையில் நிகழ்ச்சி நடத்தியதற்காக அகில இந்திய வானொலியில் இருந்து லதா மங்கேஷ்கரின் சகோதரர் நீக்கப்பட்டதற்கும் சில உதாரணங்களை சுட்டிக்காட்டி, இதுதான் காங்கிரஸ் பேச்சு சுதந்திரமா?’ என்று மோடி கேள்வி எழுப்பினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil