Congress leader Ahmed Patel : கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார். ஹரியானாவில் குறுகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அகமது பட்டேலின் உயிர்ப்பிரிந்தது.
காங்கிரஸ் எம்.பி. அகமது படேல்(71). கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்ககப்பட்டநிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல் உறுப்புகளும் பரவியது.
அகமது பட்டேலுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இதையடுத்து,குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அகமது பட்டேலின் உடல்நிலையில் கடந்த சில நாட்களாக முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அகமது படேல் இன்று (நவம்பர் 25) அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 71. இந்தத் தகவலை அகமது படேலின் மகனும் ராஜ்ய சபா உறுப்பினருமான பைசல் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இருந்து தேர்வான மாநிலங்களவை எம்.பி.அகமது பட்டேல் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. அவரின் மறைவுக்கு ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தி ட்வீட்:
“இது ஒரு சோகமான நாள். அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார். சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அகமதி படேல் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி ட்வீட்:
“அகமது படேல் அவர்கள் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, எனக்கு அப்போது நல்ல ஆலோசனைகள் வழங்கக் கூடிய நண்பராகவும் விளங்கினார். அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில், “அகமது படேல் அவர்களின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். பொது சேவைக்காக தனது வாழ்வை அற்பணித்தவர் அகமது படேல். தனது கூர்மையான அறிவிற்காக போற்றப்பட்டவர். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்திவதில் அவரது பங்கு நினைவு கூறத்தக்கது. அவரது மகனிடம் பேசி எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”