அரசியல் சாசனத்தையும் சிறுபான்மையினர், தலித்துகளின் எதிர்காலத்தையும் காப்பாற்ற மோடியை “கொல்ல” தயாராகுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தை தெரிவித்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான ராஜா படேரியா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு வீடியோவில், படேரியா காங்கிரஸ் தொண்டர்களிடம், “மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள்” என்றார்.
இது குறித்து அவர், “நரேந்திர மோடி தேர்தலை முடித்து விடுவார். மோடி மதம், ஜாதி, மொழி அடிப்படையில் பிரிப்பார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் மோடியை கொல்ல தயாராக இருங்கள். அவரை தோற்கடிக்கும் உணர்வில் கொல்லுங்கள்” என்று பன்னா மாவட்டத்தில் உள்ள பாவாய் நகரில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் படேரியா கூறினார்.
பாரத் ஜோடோ யாத்ராவில் ஈடுபடுபவர்களின் உண்மை நிலை வெளிவருகிறது என்று கூறி, படேரியாவின் கருத்துகள் குறித்து மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
மேலும், “அவர் (படேரியா) மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.
வீடியோ வெளியான பிறகு, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம், பிரதமருக்கு எதிரான படேரியாவின் அறிக்கை மிகவும் ஆட்சேபனைக்குரியது” என்றார்.
மேலும் அவர் உடனடியாக காங்கிரஸ் தலைவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். முன்னதாக, மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா, படேரியாவின் வீடியோ கிளிப்பைப் பகிர்ந்து, பிரதமரைக் கொல்ல சதி உள்ளதா என்று யோசித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.
“பிரதமர் திரு நரேந்திர மோடியை படுகொலை செய்ய முன்னாள் அமைச்சர் ராஜா படேரியா பொதுமக்களையும் காங்கிரஸ் தொண்டர்களையும் தூண்டியது மிகவும் தீவிரமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தியின் பாரத் தோடோ யாத்திரையில் இந்த சதித்திட்டத்திற்கு ஏதேனும் தயாரிப்பு இருந்ததா? இதை விசாரிக்க வேண்டும்” என்று இந்தியில் சர்மா ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில், படேரியா ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார், அவர் தேர்தலில் பிரதமர் மோடியை “தோற்கடிக்க” நினைத்தார், ஆனால் அவரது கருத்துகள் தவறாக முன்வைக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.
அதில், “பாவாயில் நேற்று நடந்த மண்டல் கூட்டம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. யாரையும் கொல்வது பற்றி பேச முடியாத மகாத்மா காந்தியின் சீடர் நான். இது தவறாக முன்வைக்கப்பட்டது. அரசியல் சாசனம், தலித்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவும் மோடியைத் தோற்கடிக்கச் சொல்ல விரும்புகிறேன்,” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/