Advertisment

கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழிசை அரசியல் பேசட்டும்: நாராயணசாமி

மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள ஜிப்மரை கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து எம்.பி-க்களுக்கும் உண்டு. விவரம் தெரியாமல் சிறு பிள்ளை தனமாக கவர்னர் பேசியது வேதனை தருகிறது என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசையை காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி விமர்சித்தார்.

author-image
WebDesk
New Update
Congress leader Narayanasamy, Tamilisai Soundararajan, கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழிசை அரசியல் பேசட்டும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, Congress, puducherry, Narayanasamy Tamilisai Soundararajan let speaks politics after resigns

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

ஜிப்மரில் உயர்சிகிச்சைக்கு கட்டணர் நிர்ணயம் செய்துள்ளதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தை கவர்னர் தமிழிசை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்தார். தமிழகத்தில் விளம்பரம் தேடிக்கொள்ளட்டும், விழுப்புரம் எம்.பி-க்கு புதுவையில் என்ன வேலை? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு காங்கிரஸ், தி.மு.க கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

புதுவை ஜெயராம் ஓட்டலில் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்கட்சித்தலைவர் சிவா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், திராவிடர் கழகம் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தேவபொழிலன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அமைப்பினர் பங்கேற்றனர். கூட்டத்தில், கவர்னர் தமிழிசையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, தேவையான நிதியை கொடுத்து ஜிப்மரை சிறப்பாக நடத்தி வந்தோம். தற்போது ஜிப்மர் தரம் குறைந்துள்ளது. தகுதியான மருத்துவர்கள் இல்லை. நோயாளிகளை கவனிப்பதற்கு தேவையான மருத்துவர்கள் இல்லை. யார் சிகிச்சைக்கு சென்றாலும், குடும்ப அட்டையை காண்பியுங்கள் என்று கேட்கும் நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுவதாலும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கொடுக்காததாலும், இதனை கண்டித்து நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் மக்கள் பிரச்னையை பற்றி திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் பேசினர். ஆனால், கவர்னர் தமிழிசையோ ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார். ஜிப்மர் நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. எல்லா மருத்துவ உபகரணங்களும் உள்ளது. பெங்களூருக்கு இணையாக மருத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏழை நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால், விமர்சனம் செய்கிறார்கள். விழுப்புரம் எம்.பி-க்கு புதுச்சேரியில் என்ன வேலை என்று பேசியுள்ளார்.

கவர்னர் தனது தரத்தை குறைத்து, தரம் தாழ்ந்து பேசியுள்ளார். ஜிப்மர் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான நிதி பாராளுமன்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. அதற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு விழுப்புரம் எம்.பி-யும் கையெழுத்து போட்டுள்ளார்.

மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள ஜிப்மரை கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து எம்.பி-க்களுக்கும் உண்டு. விவரம் தெரியாமல் சிறு பிள்ளை தனமாக கவர்னர் பேசியது வேதனை தருகிறது. ஒரு எம்.பி-யை தரம் தாழ்ந்து பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதன் மூலம், அவர் கவர்னராக இருக்க தகுதியில்லை. ஒரு தவறை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் வேலை. அப்படி சுட்டிக்காட்டும் போது, தவறை சரி செய்ய வேண்டும். இதற்கு ஜிப்மர் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். கவர்னர் வந்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

தெலுங்கானாவுக்கு முழு நேர கவர்னர் புதுவையிலேயே டேரா அடித்துள்ளார். இங்குள்ள டம்மி முதல்வர் ரங்கசாமி கவர்னர் கூறுவதற்கெல்லாம் தலையாட்டுகிறார். இதனால், கவர்னர் சூப்பர் முதல்வராக இருக்கிறார். மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை, 18 ஆயிரம் பேருக்கு புதிதாக பென்ஷன் யாருக்கும் சென்று சேரவில்லை. இதை செய்ய கவர்னரால் முடியவில்லை. இவர்தான் புதுவையை காப்பாற்ற போகிறாராம்.

மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள நிறுவனத்தை பற்றி எம்.பி பேசுவதை கவர்னர் கொச்சைப்படுத்தி பேசுகிறார். இது ஒரு தரம் தாழ்ந்த செயல். கவர்னர் அனைத்திலும் மூக்கை நுழைக்கிறார். விழுப்புரம் எம்.பி-க்கு புதுச்சேரியில் என்ன வேலை என்று கேட்பவர், ஏன் தெலங்கானா செல்லவில்லை. திருச்சிக்கு சென்று பேட்டி கொடுக்கிறார். கவர்னர் தமிழிசை புதுச்சேரி மாநில பா.ஜ.க செயலாளராக செயல்படுகிறார். அவர் தயவு செய்து கவர்னர் வேலை மட்டும் பார்க்கட்டும். ஜிப்மரை பற்றி பேசுவதற்கு எங்களுக்கும், விழுப்புரம் எம்.பி-க்கும் உரிமை உண்டு. கவர்னர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். தேவையில்லாத கருத்துகளை கூற கூடாது. வெளியில் பேச வேண்டும் என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேட்டி கொடுங்கள். நாட்டில் பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களில் உள்ள கவர்னர் பெட்டியில் அடங்கிய பாம்புபோல் உள்ளனர். அங்கு அரசை பற்றி யாரும் எதுவும் சொல்வதில்லை. இதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்தான் சூத்திரதாரர்கள்.

தெலங்கானாவில் விமானம் தர மாட்டோம் என்கிறார்கள். அதனால், உண்டியல் வசூல் செய்து தனி விமானம் ஏற்பாடு செய்து தருகிறோம். விமானத்தில் சென்று தெலங்கானாவுக்கு சென்றுவிடுங்கள். புதுச்சேரியிலிருந்து கோப்பு வந்தால் கையெழுத்து போடுங்கள். இவர் புதுச்சோியில் தேர்தலில் நிற்க போவதாக பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே, தூத்துக்குடியில் நின்று தோல்வி அடைந்தார். அரசியலில் போனி ஆகாதவர்கள்தான் கவர்னர் ஆகிறார்கள். கவர்னர் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்களது கடமையை செய்ய வேண்டும். தெலங்கானாவில் கோப்புக்கு கையெழுத்து போடாததால் உச்ச நீதிமன்றமே இவரை கண்டித்தது. ஜிப்மர் நிர்வாகம், கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.” இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

பாபு ராஜேந்திரன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ravikumar Narayanasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment