Congress leader P.Chidambaram asks questions: ஜம்மு காஷ்மீரில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகிய மூன்று பேரும் தடுக்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதியிலிருந்து சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மூன்று முன்னாள் முதல்வர்களுக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதில் 2 முன்னாள் முதல்வர்கள் மெய்நிகர் சிறையிலும், ஒரு முதல்வர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளது ஏன் என்று கேட்டுள்ளார். அதோடு, பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுடன் போராடிய அரசியல் தலைவர்கள் ஏன் பூட்டப்பட்டிருக்கிறார்கள்? என்று மத்திய அரசை நோக்கி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாட்டுகட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா அவருடைய வீட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவருடைய மகனும் கட்சியின் துணை தலைவருமான ஒமர் அப்துல்லா ஹரி நிவாஸ் பேலஸிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி ஸ்ரீநகரில் செஷ்மா ஷகி ஹட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரித்துள்ளது.
இந்நிலையில், அரசிலமைப்பின் 370வது பிரிவு திருத்தத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அஸ்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல் சுதந்திர தின விழா ஷெர் இ காஷ்மிர் அரங்கில் பலத்த பாதுகாப்புகளுடன் கொண்டாடப்பட்டது.
விழாவில், தேசியக் கொடியை ஏற்றிய ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், கூறுகையில், “மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பிறகு, மக்கள் தங்களுடைய அடையாளத்தைப் பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை” என்று கூறினார்.